search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை சாவு:மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை சாவு:மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

    • நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், சிவாடி அருகே உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது30) விவசாயி. இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தி பிரசவத்திற் காக, பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆனந்திக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தை பிறந்த நாளன்று இருந்து சேர்க்கப் பட்ட மருத்துவமனை யிலேயே தாயும், குழந்தையும் அங்கேயே சிகிச்சையில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது பிரசவ வார்டில் இருந்த குழந்தையின் தாயார் ஆனந்தி, அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் அப்போது யாரும் அவரது சத்தத்தை கேட்டு பணியில் இருந்தவர்கள் குழந்தைக்கு சிகிச்சை வழங்க வரவில்லை என கூறப்படுகிறது.

    இரவு 11.30 மணி என்பதால், பிரசவ வார்டை பூட்டி விட்டு, மருத்துவர்கள் யாரும் இல்லாமல், ஒரு நர்சு மட்டுமே அவரது அறையில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்போது மருத்துவ பணியில் இருந்தவர்கள் யாரும், பிரசவ வார்டில் உள்ள பெண் குழந்தைக்கு சிகிச்சை வழங்க யாரும் வராததாலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததாலும் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவமனை முன்பு இன்று காலை திரண்டு, அலட்சிய போக்கால் பெண் குழந்தையின் இறப்பு காரணமான மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து வந்து, பாதிக்க ப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமரச பேச்சு வார்த்தைக்கு பின், குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட துறையினர் உறுதியளித்த பின்னர், இறந்த பெண் சிசுவின் சடலத்தை பெற்றோர்கள் வாங்கி சென்றனர். பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை பிரசவித்த மருத்துவமனையிலே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×