search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிரிப்டோ கரன்சி மூலம்  2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவர் ஓசூரில் கைது
    X

    கிரிப்டோ கரன்சி மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவர் ஓசூரில் கைது

    • முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர்.
    • போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கி யுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோ கரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோ கரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×