search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொன்னேரி அரசு பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதலிடம் பெற்று சாதனை
    X

    பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

    பொன்னேரி அரசு பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதலிடம் பெற்று சாதனை

    • பெற்றோர், ஆசிரியர்கள் வாழ்த்து
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் நடந்த மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், பொதுப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கபடி போட்டியில் 2-ம் இடமும், கைப்பந்து போட்டியில் 3 ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    மேலும் ஓட்டப்பந்தயத்தில் 11 ம் வகுப்பு மாணவன் கௌதம் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றார். மேலும் சிலம்பம் போட்டியில் 8 ம் வகுப்பு மாணவி ருத்ரா என்பவர் (அலங்கார வீச்சு) மூன்றாம் இடம் பிடித்தார்.

    மேலும் இப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11ம் வகுப்பு மாணவன் தினேஷ் கார்த்திக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் 50 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2 ம் இடமும் பிடித்தார்.

    மேலும் 7 ம் வகுப்பு மாணவி திவ்ய பிரபா 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    கபடி போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு தல 2 ஆயிரம் வீதம் 24 ஆயிரமும், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் 26 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் பணப்பரிசு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

    Next Story
    ×