search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போன்ற தீய பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும் - சைதை துரைசாமி அறிவுறுத்தல்
    X

    சைதை துரைசாமி

    மது போன்ற தீய பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும் - சைதை துரைசாமி அறிவுறுத்தல்

    • நம்மை உயிர் வாழ வைக்கும் பூமிக்கு, நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
    • உணவுக்குப் பின் 3 மணி நேர இடைவெளி அடுத்த உணவிற்கு கண்டிப்பாக வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் நடைபெற்ற வான் மழை மாதாந்திர 65 கருத்தரங்கில் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவே மருந்து, மருந்தே உணவு, என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது:- நம்மை உயிர் வாழ வைக்கும் பூமிக்கு, நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்களை இயக்கி பூமியின் சுற்றுச்சூழலை கெடுக்கின்ற நாம் மரங்களை நட்டு பிரயாச்சித்தம் செய்ய வேண்டியது நம் கடமை.

    அதேபோல பணம், சொத்து சேர்ப்பது மட்டும் முக்கியமல்ல, நல்ல உடல் நலனோடு இருப்பதும் அதி முக்கியம். வயது ஆக ஆக உடல் சுருங்க வேண்டும் அதுதான் ஆரோக்கியம். உடம்பு விரிந்தால் உங்களுக்கு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.உடல் சுருங்கினால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

    நமக்கு முதல் தேவை உடல்நலம், மொழிக்கு இலக்கணம் உள்ளது போல் உடலுக்கும் உள்ளது கிடைத்த போதெல்லாம் சாப்பிடக்கூடாது.உணவு உண்டபின் அரை மணி நேரம் கழித்து தான் நீர் அருந்த வேண்டும். உணவுக்குப் பின் 3 மணி நேர இடைவெளி அடுத்த உணவிற்கு கண்டிப்பாக வேண்டும். கடவுள் நமக்கு 32 பற்களை கொடுத்திருக்கிறார்.32 முறை நன்கு மென்று உமிழ்நீருடன் உணவை விழுங்கினால் எந்த நோயும் வராது.

    இன்றைய தலைமுறையினர் துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கி தங்களது உடம்புகளை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மது போன்ற தீய பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.இது விவசாய நாடு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்.நமது விவசாயிகள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். புடலங்காய் சாற்றை அருந்தினால் நன்றாக தூக்கம் வரும். நான் காய்கறிகளை, கீரைகளை அதிகம் பயன்படுத்தி ஆரோக்கியமாக உள்ளேன்.

    யான் பெற்ற இன்பம் பெருக வையகம் என்ற அடிப்படையில் இதனை கூறுகிறேன். கால்சியம் மாத்திரை வேண்டாம். கீரைகள் போதும்,ஹீமோகுளோபின் அதிகரிக்க காய்கறிகள் போதும், நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள் கீரைகளை உண்டு வாழ்வோமானால் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவம் நிலைக்கும், எனவே மனிதன் உணவுப் பழக்கம்,யோகா பயிற்சி, உள்ளிட்ட பழக்கவழக்கங்களை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×