search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட்ட அதே கட்டிடத்தில் தற்போது வரை நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான போதுமான இடவசதி அந்த கட்டிடத்தில் இல்லாததால் விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் புதிய கட்டிடம் கட்ட 18-வது வார்டில் ராக்கியாபாளையம் ராசாத்தாகுட்டை அருகே இருந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருசில கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே இடத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ரூ.3 .50 கோடி மதிப்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பில் 14-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி டவுன்சிப் பகுதியில் மண்சாலையை தார்சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாலும், தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் மூடப்படாமல், வரி வசூல் உள்பட ஒருசில பணிகளுக்காக அந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி தலைவர் குமார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், துணை தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், 18-வது வார்டு கவுன்சிலர் தங்கம் பூபதி, தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் மூர்த்தி உள்பட நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×