search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு மழை கைவிட்டதால் சாகுபடியை தொடங்குவதில் விவசாயிகள் தயக்கம்
    X

    கோப்பு படம்.

    தென்மேற்கு மழை கைவிட்டதால் சாகுபடியை தொடங்குவதில் விவசாயிகள் தயக்கம்

    • தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.
    • நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 7,188 ெஹக்டேர் ஆழ்குழாய் கிணறு வாயிலாக 3,012,கிணற்று பாசனத்தில் 5,719, மீதமுள்ள 5,534 ெஹக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்துக்கு நிலத்தடி நீர் மட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது.

    குடிமங்கலம் பகுதியின் சராசரி மழையளவு 681 மி.மீ., ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை சீசனில் 70 சதவீதம், கோடை மழை 18, தென்மேற்கு பருவமழையால் 12 சதவீதம் மழைப்பொழிவு கிடைக்கிறது.பருவமழை குறையும் காலங்களில் அப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்கள் கருகுகின்றன. கடந்த 2002 - 2004, 2012 - 14, 2017 - 18 ஆண்டுகளில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது.

    நடப்பாண்டு கோடை கால மழை போதியளவு பெய்யாத நிலையில் தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் வறட்சியான காற்றும் வேகமாக வீசி வருகிறது.இதனால் பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு பாதித்து கிணறு, போர்வெல்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    வறட்சி காரணமாக ஆடிப்பட்ட சாகுபடியை துவக்காமல், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்றுவதில் விவசாயிகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    விளைநிலங்களில் நிலைப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் விரைவாக ஈரப்பதம் காய்ந்து விடுகிறது. மேலும் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது.காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க புதிதாக போர்வெல்கள் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    சுமார் ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நீண்ட கால பயிரான தென்னை மரங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை துவங்கியுள்ளது.போதிய மழை இல்லாததால் மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்டத்துக்கான எவ்வித பணிகளையும் விவசாயிகள் துவக்கவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.இந்தாண்டு காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் காரணமாக பாசனத்துக்கு இம்மாதத்தில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. காண்டூர் கால்வாய் பராமரிப்பு காரணமாக தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படவில்லை.

    குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறுகையில், கால்வாய் பராமரிப்பு பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், சாகுபடி கைவிடப்பட்டு தரிசாகும் அபாயம் உள்ளது.

    கால்வாய் பராமரிப்பு பணிகளின் நிலை மற்றும் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு முறையான தகவல் மற்றும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×