search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே கோவில் நிலத்தில் கல் நடும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
    X

    அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

    காங்கயம் அருகே கோவில் நிலத்தில் கல் நடும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

    • சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக 900 ஏக்கா் நிலம் உள்ளது.
    • முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக காங்கயம் வட்டாரத்தில் 900 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் சிவன்மலை சுற்றுப் பகுதியில் மட்டும் 233 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில் காங்கயம் அருகே நீலக்காட்டுபுதூா் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அதிகாரிகள் 2022ம் ஆண்டு அளவீடு செய்தனா்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் தற்போது அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நடுவதற்கு சிவன்மலை முருகன் கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, கண்காணிப்பாளா் பால்ராஜ், நில அளவையாளா்கள் கிருஷ்ணகாந்த், பிரதீஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

    அப்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருபவா் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், கல் நடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் கல் நடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினா்.

    இதையடுத்து கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, காங்கயம் காவல் ஆய்வாளா் காமராஜ் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இப்பிரச்னை தொடா்பாக வருவாய் வட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×