search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிழற்குடை இல்லாததால் வெயிலில் வாடும் நோயாளிகள் -  முதியவர்கள் மயங்கி விழும் அவலம்
    X

    நிழற்குடை இல்லாததால் வெயிலில் தவிக்கும் பொதுமக்கள். 

    நிழற்குடை இல்லாததால் வெயிலில் வாடும் நோயாளிகள் - முதியவர்கள் மயங்கி விழும் அவலம்

    • தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது
    • சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாராபுரம் சாலையில் உள்ளது. மருத்துவக் கல்லுரி மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அதே சமயம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாள்தோறும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெள்ளியங்காடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தாராபுரம் சாலைக்கு வந்து செல்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முக்கிய நிறுத்தமாக உள்ளது.

    இந்த நிறுத்தத்துக்கு பேருந்துகளை நாடி வரும் பொதுமக்களுக்கு வெயில், மழை என்றாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் துர்பாக்கிய நிலை தான் உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு வருபவர்களில் பெரும்பாலனோர் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் உட்பட உடல்நலம் குன்றியிருப்பவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போதும், சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அதிலும் சமீபநாட்களாக கடந்த மே மாதத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பெரும் அவதியடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    சந்திராபுரத்தை சேர்ந்த முத்துசாமி கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பிறகு, பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளில் அரசு மருத்துவமனையை பலரும் நாடி வந்து செல்கின்றனர். அதேபோல் நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்வதற்கான உயரிய தரத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பு. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெயிலில் வாடியும், மழையில் வதங்கியும் வருகின்றனர். வயதான பெண்கள் வெயிலால் சோர்ந்து மயக்க நிலைக்கு செல்லும் நிலை உள்ளது என்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.

    அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாக்கடை நீர் செல்வதற்கும், மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    Next Story
    ×