search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூா் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீா் திட்ட மேம்பாட்டு  பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
    X

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்த காட்சி. 

    முத்தூா் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீா் திட்ட மேம்பாட்டு பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

    • காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    காங்கயம்,அக்.22-

    ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொடுமுடியில் தலைமை நீரேற்று நிலையம், அருகில் இச்சிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையம், அடுத்து திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் மேட்டுக்கடை, வாலிபனங்காடு, பச்சாபாளையம் நீருந்து நிலையங்கள், காங்கயம் அய்யாசாமி நகா் காலனி நீா் விஸ்தரிப்பு நிலையம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

    1998 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 2013 ல் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 1,790 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு தினசரி 40.45 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். 25 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இத்திட்ட கான்கிரீட் குழாய்களில் தொடா்ந்து நீா்க்கசிவு ஏற்படுவதால் நிா்ணயிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதையடுத்து ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பணிகளின் அனைத்து நிலைகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டாா்.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் செல்லமுத்து, மேற்பாா்வைப் பொறியாளா் மதியழகன், நிா்வாகப் பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×