search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

    • அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.
    • கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்த பாசன பகுதியில் கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு போதிய மழை இல்லாத நிலையில் ஆயக்கட்டு பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.எனவே அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- பருவமழை பெய்யாததால் அமராவதி பிரதான கால்வாய் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அணையிலிருந்து பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

    அணையிலுள்ள தண்ணீரை புதிய ஆயக்கட்டு மற்றும் ஆற்றுப்பாசனத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். கரூர் வரை தண்ணீர் சென்றடைய வேண்டுமானால், அணையிலிருந்து கரூர் வரை ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இயக்காமல் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×