search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் களை கட்டும் தீபாவளி வியாபாரம் - நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
    X

    கோப்புபடம். 

    திருப்பூரில் களை கட்டும் தீபாவளி வியாபாரம் - நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

    • பல்வேறு தரப்பினரும் பண்டிகைக்காக பொருள் வாங்க நகரின் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • பாதசாரிகள் ரோட்டில் இறங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    வருகிற 24-ந் தேதி, தீபாவளி கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ள திருப்பூர் நகரில் போனஸ் பெறும் தொழிலாளர்கள் பண்டிகை கொண்டாட புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தவிர பல்வேறு தரப்பினரும் பண்டிகைக்காக பொருள் வாங்க நகரின் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    முக்கிய கடை வீதிகளில் உள்ள பெரிய, சிறிய கடைகள் மட்டுமின்றி பண்டிகை கால விற்பனையில் தரைக்கடைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் திருப்பூர் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தரைக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு விற்பனை தூள் பறக்கிறது.

    வெளி மாவட்ட, வெளி மாநில சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, உள்ளூர் பகுதியை சேர்ந்த சாலையோர வியாபாரிகளும் அதிக அளவில் இது போல் கடை விரித்துள்ளனர். இவற்றில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பொருட்களை விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.

    பண்டிகை கால போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குமரன் ரோடு, காமராஜ் ரோடு பகுதிகளில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முனிசிபல் ரோடு பகுதியில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.பாதசாரிகள் ரோட்டில் இறங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாநகரில் மக்கள் கூட்டம் பஸ் நிலையங்களில் அதிகமாகவில்லை. மேலும் பிரதான சாலைகளில் வாகன நெரிசலும் பெரிய அளவில் இல்லாததால் போக்குவரத்து மாற்றத்தை நாளை 21-ந் தேதி முதல் அமல்படுத்த மாநகர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க மாநகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் குமரன் ரோட்டில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க வசதி செய்யப்பட்டுள்–ளது. இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் குமரன் ரோட்டில் இருந்து ஊத்துக்குளி ரோடு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் சாலையோரம் மரக்கட்டைகளுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல் ஜேப்படி ஆசாமிகளை கண்காணிக்க மப்டியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 24ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன. திருப்பூர் மக்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர். ஆடை ரகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது என பண்டிகை கால பர்சேசில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இதனால் வழக்கத்தைவிட பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. மக்களின் பண்டிகை கால பண தேவையை பூர்த்தி செய்ய ஏ.டி.எம்., மையங்களை தயார்நிலையில் வைத்திருக்க மாவட்ட முன்னோடி வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் அலெக்சாண்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 561 வங்கி கிளைகள் உள்ளன. 800க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் 70 சதவீத ஏ.டி.எம்., மையங்களில், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், 30 சதவீத மையங்களில் அந்தந்த வங்கிகள் மூலம் நேரடியாகவும் பணம் நிரப்பப்படுகிறது.

    தீபாவளி நெருங்கிவிட்டது. பண்டிகை கால பண தேவைகளுக்காக, ஏ.டி.எம்., மையங்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சீரான இடைவெளியில் பணம் நிரப்பி ஏ.டி.எம்., மையங்களை தொடர்ந்து இயக்க நிலையில் வைத்திருக்கவேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பண்டிகை காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தியும், செக்யூரிட்டி நியமித்தும் வங்கிகள் தங்கள் ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×