search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?  - தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? - தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

    • நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது.
    • கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது.

    திருப்பூர்:

    நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை பாதிக்க செய்தது.இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் இருந்துநூல்விலை சீராக இருந்து வருகிறது.அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய நகர்வு இல்லாததால் பழைய ஆர்டர்களை தக்க வைக்கும் முயற்சியே பிரதானமாக இருக்கிறது.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அனுப்பிய சரக்கு கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.அந்நாட்டு மக்கள் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சிக்கன நடவடிக்கையில் இருந்து வருகின்றனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர்.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதியும் 2,680 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 8,831 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூல், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 7,282 கோடிக்கு மட்டுமே நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நூலிழை, பேப்ரிக் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம், 3,477 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டில் 3,223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது.இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி 348 கோடியாக இருந்தது 274 கோடியாக குறைந்துள்ளது.

    கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது. கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தியாகும் கார்பெட் ஏற்றுமதி 1,182 கோடியாக இருந்தது 989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு - நூல் விலையுடன் தயார்நிலையில் இருந்தும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நூற்பாலைகளும் உற்பத்தி யை குறைத்துள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பாது. அதன்பின்னரே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது.எனவே அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்துறை யினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்தநிலையில் நெதர்லாந்தை சேர்ந்த லாடல் பவுண்டேஷன் என்ற அமைப்பு குட் பேஷன் நிதி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் முயற்சிக்கு இவ்வமைப்பு உதவுகிறது.இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு சுலபத் தவணை முறையில் அமெரிக்க டாலரில் இந்த அமைப்பு கடனுதவி தருகிறது. மறுசுழற்சி, மின்சாரம் பயன்பாட்டை குறைக்கும் எந்திரங்கள், தண்ணீர் பயன்பாட்டை குறைக்க உதவும் தொழில் நுட்பங்கள், கழிவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுக்கு, தரத்தை பொறுத்து, எவ்விதமான பிணையுமின்றி கடன் வழங்குவதே இவ்வமைப்பின் சிறப்பு.திட்டத்தைப் பொறுத்து ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான நிதியை பெறலாம்.

    இந்த அமைப்பை சேர்ந்த இத்திட்டத்தின் இயக்குனர் பாப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தனர்.இவர்களுடனான கலந்துரையாடலுக்கு இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பாப் மற்றும் ஜெயந்த் ஆகியோர் இத்திட்டத்தைப் பற்றி விளக்கினர்.ஒரு நிறுவனத்தின் பிராண்ட்டை பிரபலப்படுத்துவது, மார்க்கெட்டிங்கை மேம்படுத்துவதற்கும் லாடல் பவுண்டேஷன் உதவுகிறது.

    சுற்றுச்சூழல் சார்ந்த ஆடை தயாரிப்பின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அளவில் அதற்கு இருக்கின்ற வரவேற்பு பற்றியும் தனியார் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன் விளக்கினார்.

    எத்தகைய முயற்சிகளால் சுற்றுச்சூழல் சார்ந்த ஆடைகள் தயாரிப்பில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பற்றி ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் விளக்கினார்.நிகழ்ச்சியில், குட் பேஷன் நிதி அமைப்பு மற்றும் ஐ.டி.எப்., அமைப்புகளுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் 50 ஜவுளித் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×