search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொப்பரைகளையும்    அரசு கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொப்பரைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • ‘சிண்டிகேட்’ அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

    காங்கயம்:

    தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த,பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பந்து கொப்பரை கிலோ 110 ரூபாய்க்கும், அரவை கொப்பரை கிலோ 105.90 ரூபாய்க்கு, கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை, 31 வரை செயல்பட்டன.கொப்பரை மற்றும் தேங்காய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை உயராத நிலையில் கடும் பாதிப்பை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்னை மரங்கள், வழக்கமாக, ஏப்ரல்- மே மாதங்களில் மகசூல் குறைவாகவும், பருவ மழை துவங்கியதும், ஜூன், ஜூலை மாதங்களில் மகசூல் அதிகரித்தும் காணப்படும். கொப்பரை கொள்முதலில், மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஈரப்பதம், பூஞ்சானம் தாக்குதல் உள்ளிட்டவற்றோடு ஒரு ஏக்கருக்கு, 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.இதன் வாயிலாக ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் கொப்பரையில் 20 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் விற்க முடியும்.மீதமுள்ள 80 சதவீதம் கொப்பரையை, வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளிடமிருந்து ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வதால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசு கொள்முதல் காரணமாக வெளி மார்க்கெட்டில் விலை உயரும் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்து வருகிறது.ஆனால் தற்போது ஏக்கருக்கு 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக மீதமுள்ள கொப்பரை விற்பனைக்கு வரும் என்பதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, குறைந்த விலைக்கு மட்டுமே வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர்.அரசு கொப்பரை கொள்முதல் துவக்கியும், வெளி மார்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விலை உயரவில்லை. மாறாக அரசு நிர்ணயித்த ஆதார விலையை விட குறைவாகவே கிலோ 76 ரூபாய் என்ற அளவில் வெளிமார்க்கெட் விலை உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: -விவசாயிகளுக்கு பயன் மற்றும் வெளி மார்க்கெட்டில், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொப்பரைக்கான ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.தற்போது ஒரு ஏக்கரில் 60 முதல் 70 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு தென்னை மரத்தில் சராசரியாக ஆண்டுக்கு 150 முதல் 200 காய்கள் கிடைக்கும்.இவ்வாறு ஒரு ஏக்கரில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காய்கள் வரை மகசூல் இருக்கும். 100 தேங்காயில் 13 முதல் 18 கிலோ வரை கொப்பரை உற்பத்தியாகும்.இவ்வாறு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 1,300 முதல் 1500 கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் தென்னை இருந்தால் 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையில், 80 சதவீதம் வரை வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான கொப்பரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மட்டை உள்ளிட்ட உப பொருட்களும் விற்பனையாகாமல் தேங்கி வருகிறது.எனவே தென்னை மகசூல் அடிப்படை கணக்கீட்டை மாற்றி அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து கொப்பரைகளையும் அரசு கொள்முதல் செய்வதோடு கொப்பரைக்கான ஆதார விலையையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×