search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு வாங்கி தருவதாக மர்மநபர்கள் மோசடி - புகார் அளிக்க செயற்பொறியாளர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    மின் இணைப்பு வாங்கி தருவதாக மர்மநபர்கள் மோசடி - புகார் அளிக்க செயற்பொறியாளர் அறிவிப்பு

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×