என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பூர்
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் முறைகேடாக மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்மணி ஆகியோரது தலைமையிலான போலீசார் மங்களம் சாலையில் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மதுவிலக்கு போலீசாரின் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26) மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிகளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். முறைகேடக மது பாட்டில்களை கொண்டு சென்ற கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.
இன்று மிலாது நபி பண்டிகையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்புதிருந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் (55) என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நிறுவனம் மூடப்பட்டு சென்ற நிலையில் பணிக்கு யாரும் வேலைக்கு வராததால் காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காவலாளி சென்று பார்த்த போது பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளர் மற்றும் தீயானைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனம் முழுவதும் பின்னலாடை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மளமளவென நிறுவனம் முழுவதும் தீ பரவியுள்ளது.
திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனாலும் பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் உற்பத்தி செய்து பண்டல் போட்டு வைக்கப்பட்டிருந்த துணிகள், பின்னலாடை இயந்திரம் , கட்டிடம் என பல கோடி மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர்.
அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரது புதுக்கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்தபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சத்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அடுத்து கரூரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரை கரம் பிடித்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும், அடுத்து மற்றொரு வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சத்யாவின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அள்ளி ராணி தலைமையிலான போலீசார் கரூர் அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். சத்யாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் பார்ப்பவர்களை புரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி செய்துள்ளார்.
குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்காக புரோக்கர் கமிஷனாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சத்யாவுக்கு தாய், தந்தை, உறவினர் என ஒரு சிலரை ஏற்பாடு செய்து எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் சத்யா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு நீங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை திருமணமானவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, கரூர் சென்று விடுவார்.
இதேபோல் 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் உடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. திருமணத்திற்காக போடப்பட்ட நகைகள் அனைத்தையும் புரோக்கர் தமிழ்ச்செல்வி பெயரில் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா. 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி மங்கலம் இஸ்லாமியர்களின் பூர்வீக பள்ளிவாசலான மங்கலம் சுன்னத்வல் ஜமாஅத் பெரியபள்ளிவாசல் சார்பில் மங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அவை கோவில் திருப்பணிக்குழு மற்றும் கும்பாபிஷேக விழாக்கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற நிகழ்வு காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் காங்கேயம் அடுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளது.
இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இன்று காலை பொன்னுசாமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தோட்டத்திற்கு சென்று பட்டியில் பார்த்தபோது ஆடுகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது கிணற்றுப் பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகளை கட்டி ஆடுகளை மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்து விட்டது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவர் தோட்டத்தில் வளர்த்த வந்த 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றது. எனவே தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது.
- மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
பின்னலாடை நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொடங்கி வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து டாலர் சிட்டி என்ற பெருமையுடன் திகழ்கிறது. வெளிநாட்டு ஆடை ஏற்றுமதியால் உலகம் அறிய செய்தாலும் உள்நாட்டு ஆடை வர்த்தகமும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது.
பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் நோக்கி வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுத்து ஆடைகளை பெற்று செல்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு வர்த்தகம் அந்தளவுக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆர்டர் வருகையை பார்க்கும்போது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் திருப்பூர் எப்படி பரபரப்பாக இருந்ததோ அந்த நிலையை எட்டி இருக்கிறது என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது. குறிப்பாக உள்ளாடைகள், பேஷன் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாடை தயாரிப்பில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. பருத்தி ஆடைகளை பெரும்பாலும் தயாரித்து வந்த திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மெல்ல மெல்ல செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகிறார்கள். பாலியஸ்டர் துணிகளில் பல ரகங்கள் உள்ளன.
தற்போது துணிகளாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் துணிகளை வாங்கி ஆடைகளாக தயாரிப்பதற்கு சில நாட்களே ஆகும் நிலை உள்ளது. அந்தளவுக்கு நவீன எந்திரங்கள், கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பருத்தி துணிகளை தயாரிக்க முன்பெல்லாம், வர்த்தகர்கள் கூறியபடி நூல் எடுத்து அதை நிட்டிங் செய்து, தகுந்த நிறத்துக்கு சாயமேற்றி துணியாக கிடைப்பதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்பு நடக்கும்.
ஆனால் தற்போது பாலியெஸ்டர் மற்றும் பருத்தி துணிகளாகவே சந்தையில் எளிதில் கிடைப்பதால் பிரிண்டிங், எம்ப்ராய்டரிங், தையல் என 2 நாட்களுக்குள் ஆர்டர்களை முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்புக்கு தகுந்த சூழல் நிலவி வருகிறது. பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாலியெஸ்டர் துணிகளாகவே விரும்பிய வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்த 2 நாட்களில் ஆடைகளை தயாரித்து அனுப்பும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான தொழிலாளர்கள் இருந்தால் இன்னும் ஆர்டர்களை தைரியமாக எடுத்து அனுப்பி வைக்க முடியும்.
சில நிறுவனங்களில் விடுதி அமைத்து தொழிலாளர்களை தங்க வைத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை. தீபாவளி ஆர்டர்களை ஆயுத பூஜையையொட்டி முடித்து அனுப்பி வைப்போம். தற்போது உள்நாட்டு ஆடை தயாரிப்பு பரபரப்பாக உள்ளது.
கொரோனாவுக்கு முன்பு திருப்பூர், உள்நாட்டு ஆடை உற்பத்தி எப்படி இருந்ததோ அதுபோன்ற சூழல் இந்த ஆண்டு தென்படுகிறது. தீபாவளி பண்டிகை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உற்சாகமாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு வேகமெடுத்துள்ளதால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழிலில் 21 மாநிலங்களை சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் அதிகம்.
பின்னலாடை நிறுவனங்களுக்கு, தீபாவளி கால ஆர்டர் என்பது மிகவும் முக்கியம். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள், உள்ளாடைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க திருப்பூர் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறி, அம்மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பண்டிகைக்கால ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
சொந்த மாநிலம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, ரேஷன் கார்டு பதிவுக்காக செல்வதாக கூறுகின்றனர். பீகார் மற்றும் ஒடிசாவில் விசாரித்தபோது, நிலம் சீரமைப்பு பணி நடக்கிறது என்றும், உரிமையாளர்கள் வரும் 30ந்தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென, அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மை நிலையை ஆராய்ந்து வருகிறோம். உற்பத்தி பரபரப்பாக நடக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது எங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி இருக்கும் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்துள்ள போலீசார், அவரை நேற்று இரவு 11.30 மணி அளவில் அழைத்து கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இன்று காலையில் திருப்பூரை சென்றடைந்த போலீசார் முதலில் மகா விஷ்ணுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் திருப்பூர் குளத்து பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் 'பவுண்டேசன்' அமைப்பின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காலை 10.30 மணி அளவில் அலுவலகத்துக்குள் சென்ற போலீசார் கதவை மணிக்கணக்கில் பூட்டிக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை திரட்டியுள்ளனர். மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பரம்பொருள் பவுண்டேஷனுக்குக்கு யார்-யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளனர்? சட்ட விரோதமாக பண பரிமாற்றங்கள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.
முன்னணி தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது பேச்சு திறமையை வெளிக்காட்டிய மகாவிஷ்ணு அதனை வைத்தே பிரபலமாக முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார். பின்னர் குறுந்தாடியை வைத்துக்கொண்டு சொற்பொழிவாற்ற தொடங்கினார்.
இப்படித்தான் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு பயணம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சொற்பொழிவாளராக மாறியது எப்படி? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவில் யார் மூலமாக கலந்து கொண்டீர்கள்? அதற்கு யார் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? என்பது போன்ற விவரங்களையெல்லாம் கேட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் இந்து பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு நாம் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.
- முருக பக்தர்கள் மாநாடு என்று ஓட்டுக்காக போலி வேஷம் போட்டு நடத்துகிறார்கள்.
திருப்பூர்:
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் திருப்பூர் ஆலாங்காட்டில் நேற்று இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாலகங்காதர திலகர் வெள்ளையரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய போது இந்து மக்களை ஒன்று திரட்ட விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியோடு நடைபெற காரணம் ராம.கோபாலன் தான். இந்து முன்னணி தமிழகத்தில் இந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்து பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு நாம் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.
அனைத்து விழாக்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முதலமைச்சர் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்பது தான் ஒவ்வொருவருடைய கேள்வி. முருக பக்தர்கள் மாநாடு என்று ஓட்டுக்காக போலி வேஷம் போட்டு நடத்துகிறார்கள். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நடிகர் விஜய்யும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. எப்படி இவர்கள் நடுநிலையாளர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் இன்று நாம் பார்க்கின்றோம். மக்கள் ஆன்மீகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று. தமிழகத்தில் இன்று ஒவ்வொரு வீதிகளிலும் மக்கள் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்துக்களிடம் எழுச்சி பெருகியுள்ளது.
மத்தியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அவைகளை நிறைவேற்றி வருகிறோம். காஷ்மீரில் ஆர்டிகல் 370ஐ நீக்குவோம் என்று உறுதி அளித்தோம். அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என உறுதி அளித்ததன் படி ராமர் கோவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் ஒரு சூழ்நிலை வரவேண்டும், மாற்றம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
- இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலத்தில் யாருடைய விநாயகர் சிலை முதலில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான தகராறு மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
- கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென மாயமானார்கள். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது கேரள போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் சிறுமிகளுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் என்ற 2 வாலிபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து திருமுருகன்பூண்டிக்கு விரைந்த கேரள போலீசார், அங்கிருந்த 2 சிறுமிகளை மீட்டதுடன், சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை அழைத்து வந்ததும், பின்னர் சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. செலவுக்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தபோது நண்பர்கள் உதவியுடன், திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும்.
- பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை.
திருப்பூர்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 3 அடி, 5 அடி, 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் வீடுகளில் 15 லட்சம் மக்கள் சிறிய விநாயகர் சிலைகள் வைக்கிறார்கள். திருப்பூரில் 4-வது நாளும், கோவையில் 5-வது நாளும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படுகிறது. திருப்பூர், கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும். அவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இந்து முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. இந்துக்களின் மக்கள் தொகைற்போது வரை 9 சதவீதம் குறைந்துள்ளது. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்து தடை போடுகிறார்கள். தடை போட போட இந்து மக்கள் எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த அரசு மீது இந்து மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். திருப்பூரில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் எழுச்சியோடு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் உள்ள இந்துக்களையும் மாநாட்டுக்கு அழைத்துள்ளதை பார்க்கும்போது இந்துக்களின் எழுச்சியை இந்த அரசு புரிந்துள்ளதை காட்டுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வசூலிப்பதில் பிரச்சனை செய்வதாக இந்து முன்னணி மீது தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்குவதற்காக சிலர் செயல்படுகிறார்கள். நன்கொடை வசூல் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.
- 'வேட்டையன்' பட ரஜினிகாந்த் கெட்-அப்பில் விநாயகர் சிலை செய்து மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் அசத்தியுள்ளார்.
- கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயிலர் விநாயகர் வடிவமைத்து ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார்
விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.
பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு சென்று மக்கள் கரைப்பர்.
இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித், 'வேட்டையன்' பட ரஜினிகாந்த் கெட்-அப்பிலும் ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தோற்றத்தை போலவும் களிமண்ணால் விநாயகர் சிலை வடிவமைத்து அசத்தி உள்ளார்
இதே போல் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயிலர் விநாயகர் வடிவமைத்து ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்