என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவள்ளூர்
- உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன.
- பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அதில் பல்வேறு நாய்களை அடைத்து வைத்து பராமரித்து வந்தார். அதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் அதற்கான பணத்தை பெற்று பிரியா அந்த நாய்களை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில எப்போதும் அதிக அளவில் நாய்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் பிரியாவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் நாய்களுக்கு முறையாக உணவுகள் ஏதும் வழங்கப்படாமல் அவை குரைக்கத்தொடங்கின. மேலும் அதன் மலம்,சிறுநீர் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாய்களுக்கு வழங்கப்பட்ட மீதி இருந்த இறைச்சிகள் அழுகிகிடந்தன. மேலும் உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன. பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தன. இதனை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் தங்களது மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வீசினர்.
இதற்கிடையே கடும் துர்நாற்றம் மற்றும் நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தனியார் தொண்டு நிறவனத்தினரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையில் தனியார் விலங்குயகள் நல ஆர்வலர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பரிதாபமான நிலையில் நாய்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
3 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டின் அறைகள், மொட்டை மாடி மற்றும் வீட்டின் பாதை அனைத்தும் நாய்களின் மலம், சிறுநீர் மற்றும் அழுகிய உணவுகளால் துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான நாய்களுக்கு தோல் அலர்ஜி நோய், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டதில் அதன் உடல்களில் காயம் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்த 18 நாய்களை மீட்டனர். இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது நாய்களை மீட்டுச்சென்றனர். மேலும் உரிமையாளர்கள் வராத நாய்களை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரிடம் மனிதாபிமானமற்று நாய்களை பராமரிக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் குமார் என்பவர் கூறும்போது, இங்கு 30 நாய்கள் வரை இருந்தன. ஆனால் அதனை உரிய முறையில் பராமரிக்கவில்லை. நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.
- சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை கூவம் ஆற்றுக்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோர குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எடுத்து வருகிறார்கள்.
இதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அகற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
- மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு போலீசாரை பாராட்டினார்.
ஆவடி:
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் திறமையாக செயல்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 185 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 398 செல்போன்கள், ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 யை போலீசார் மீட்டு உள்ளனர்.
மீட்கப்ட்ட நகை, பணம் மற்றும் பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட நகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க தங்க நகை கடை போல் காட்சியளித்தது.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகை,பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ( ஆவடி ) ஐமான் ஜமால், (செங்கு ன்றம்) பாலகிரு ஷ்ணன், போ க்குவரத்து துணை கமிஷனர் ஜெய லட்சுமி, உதவி கமிஷனர்கள் ஆவடி அன்பழகன், பட்டாபிராம் சுரேஸ்குமார், அம்பத்தூர் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
- விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
- ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் ஸ்ரீ மந்தவெளியம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் ஜாத்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
- கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இன்றும் கடல் அலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
இந்த நிலையில் அலை சீற்றம் காரணமாக பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி பகுதியில் கடல் நீர் கரையை தாண்டி அருகில் உள்ள பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டது. சுமார் ½கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மணலால் மூடி துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கும், வடசென்னை அனல் மின்நிலையத்திற்கும் செல்லும் முக்கிய சாலை ஆகும். சாலை முழுவதும் மணல் மூடி கிடப்பதால் ஊழியர்கள் பொன்னேரி- மீஞ்சூர் வழியாக சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி சென்று வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த மிக் ஜாம் புயலின் போது கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது வழக்கமான கடல் சீற்றத்தில் சாலை வரை கடல் நீர் வந்து சாலை முழுவதும் மணலாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்காத அளவில் தடுப்பணை மற்றும் உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.
- பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- தற்போது இக்கோவிலில் இரண்டாவது முறையாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் கிராம தேவதைகளான அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில் மற்றும் செவிட்டு செல்லி அம்மன் திருக்கோவில்கள் என இரண்டு திருக்கோவில்கள் உள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு கோவில்களில் பாஸ்கர்(வயது48), கோவிந்தன்(வயது70) ஆகியோர் நேற்று இரவு பூஜையை முடித்துக் கொண்டு கோவில்களை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். இன்று விடியற்காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கோவில்களில் இருந்த உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், அதிலிருந்த ரொக்க பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இதனால் அந்த உண்டியல்களை இங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றிருந்தனர். கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வீசி இருந்தனர். இது குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எரோமியா அந்தோணிராஜ் தலைமையில் போலீசாரும், கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி, அருள் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர் டில்லிபாபு வந்து கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்துக் கொண்டு சென்றார். 2கோவில்களில் மொத்தம் மூன்று தாலிகள் அம்மன் கழுத்தில் இருந்தது. இவை மொத்தம் ஒன்றரை சவரன் ஆகும். இரண்டு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் மொத்தம் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். செல்லியம்மன் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், இக்கோவிலில் இருந்த உண்டியல் தொகை ஒட்டுமொத்தமாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், செவிட்டு செல்லியம்மன் திருக்கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருடு போனது. தற்போது இக்கோவிலில் இரண்டாவது முறையாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார்.
- ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார். அவரை மகன் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது. சொத்துக்கள் மற்றும் பணத்தை பறித்த பாலாஜி தனது தந்தை ரகுநாதனை இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த ரகுநாதன் திருவள்ளூர் வீரராகவர் கோவில் முன்பு உணவின்றி, பிச்சையெடுத்து அங்கேயே ஒரு வாரமாக தங்கி இருந்தார்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
என் உழைப்பில் வந்த வீடு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை எனது மகன் பாலாஜியும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரும் திட்டமிட்டு பறித்து என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். என்னை பசி பட்டினியால் கொடுமை செய்து கொல்லவும் துணிந்து விட்டார்கள்.
அவர்களால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என் சொத்தையும் எனது மனைவியின் நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடம் இருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும்.
இதற்கு உடந்தையாக இருக்கும் மகனின் மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி வருகிறது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2356 மி.கனஅடிதண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 702 மில்லியன் கனஅடி(6.7டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி வருகிறது. ஏற்கனவே பூண்டி ஏரியில் 898 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 108 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081) தண்ணீர் குறைந்த அளவே உள்ளன. தற்போது நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தில் நீர் ஆவியாதலை தடுக்கும் வகையில் இந்த 2 ஏரிகளில் உள்ள தண்ணீரையும் புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு நீர் வரத்து 425 கனஅடியாக உள்ளது. வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரி விரைவில் முழுவதும் வறண்டு விடும் நிலையில் உள்ளது.
தற்போது குடிநீர் ஏரிகளில் உள்ள 6.7 டி.எம்.சி. தண்ணீரை வைத்து சென்னையில் இன்னும் 6 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் எனவே வரும் மாதங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.
மேலும் பூண்டி ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டடேறு அணையில் இருந்து தண்ணீரை பெறவும் நீா்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் தற்போது 2960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2356 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் மொத்தம் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி தண்ணீர் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொலை செய்யப்படுவதற்கு முன்பு அஸ்வின் குமாரை அவரது கூட்டாளி அஜய் நேற்று மாலை அழைத்து சென்று உள்ளார்.
- அஜய்யை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொன்னேரி:
சென்னையை அடுத்து உள்ள மீஞ்சூர் டி.எச். சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த வாலிபரின் கை மட்டும் தனியாக வெட்டப்பட்டு நடுரோட்டில் கிடந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள், வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அந்த பிணத்தை போலீசார் கைப்பற்றியபோது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாலிபரின் உடல் மட்டுமே அங்கு கிடந்தது. தலை தனியாக துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தலையை காணவில்லை. மேலும் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கையும் அங்கு தனியாக கிடந்தது.
அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவருக்கு 25 வயது இருக்கும். அந்த வாலிபரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் இணை கமிஷனர் பால கிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜ ராபர்ட், இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபரை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு போர்வையால் சுற்றி எடுத்து வந்து மீஞ்சூர் டி.எச். சாலை, காந்தி ரோடு பகுதியில் நடுரோட்டில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.
எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் வாலிபரின் தலை இல்லாத உடலை வீசி சென்றிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? கொலை செய்யப்பட்டவரின் தலை எங்கே என்பதை கண்டுபிடிப்பதற்காக உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் உடனடியாக அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது யார் என்பதை போலீசார் உடனடியாக கண்டு பிடித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் என்பது தெரியவந்தது. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது திருப்பாலைவனம் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. கொலை செய்யப்பட்ட ரவுடி அஸ்வின் குமாருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகியுள்ளன. இது காதல் திருமணம் ஆகும்.
இந்த நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அஸ்வின் குமாரை அவரது கூட்டாளி அஜய் நேற்று மாலை அழைத்து சென்று உள்ளார். அதன் பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அஜய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமாரின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. அவரது தலை சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் காலனி சுடுகாட்டில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த தலையை போலீசார் கைப்பற்றினார்கள்.
அஸ்வின் குமாரை கொலை செய்து அவரது தலை, கைகளை தனியாக வெட்டி எடுத்த பிறகு தலையை மட்டும் சுடுகாட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர். உடல் மற்றும் கையை போர்வையால் சுற்றி மீஞ்சூர் டி.எச். சாலை காந்தி ரோடு பகுதியில் சாலையில் வீசி சென்றுள்ளனர்.
இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்தவர்கள் ஏதோ வாகனத்தில் இருந்து காய்கறி மூட்டை விழுந்து இருக்கலாம் என்று நினைத்தனர். 3 பேர் அந்த மூட்டையை தூக்க சென்றனர். அப்போது துண்டிக்கப்பட்ட கை மட்டும் போர்வையில் இருந்து வெளியே வந்து தனியாக கிடந்தது. கை தனியாக கிடப்பதை பார்த்த பிறகு அவர்கள் பயந்து போய் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அஸ்வின் குமாரை கடைசியாக வெளியே அழைத்து சென்ற அஜயை போலீசார் தேடினார்கள். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவர் பிடிபட்டால் தான் ரவுடி அஸ்வின் குமாரை கொலை செய்தவர்கள் யார்? அஸ்வின் குமார் கொலைக்கும், அவரது கூட்டாளி அஜய்க்கும் தொடர்பு உள்ளதா? அஸ்வின் குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை எங்கே வைத்து கொலை செய்தனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். எனவே அஜய்யை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நேரத்தில் தலை, கை தனியாக துண்டிக்கப்பட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
- அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும்.
பொன்னேரி:
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். பனை மரத்தை ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைப்பதுண்டு.
நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கவும் பனை மரம் உதவுகிறது. இது வளர்ச்சி அடைய 15 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஆகும். பனைமரம் முழுமையும் பயனுள்ளதாகும். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து தென் மாவட்டங்களில் மழை இல்லாமல் காய்ந்து பட்டு போய் காணப்படுகின்றன.
செங்கல் சூளை மற்றும் எரிப்பதற்கு பனை மரம் வெட்டப்பட்டு அழிந்து வருவதை கண்டறித்து தமிழக அரசு பனை மரத்தினை பாதுகாக்க நலவாரியம் மற்றும் கூட்டுறவு துறை அமைத்து, தமிழகம் முழுவதும் பனை விதைகள் விதைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் படுக்கபத்து கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் தாத்தா காலத்தில் இருந்தே பனைத்தொழில் செய்து வந்த நிலையில் அப்பகுதியில் மழை இல்லாததால் நிறைய பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் தொழில் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பழைய எருமை வெட்டி பாளையத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 480-க்கும் மேற்பட்ட பனை மரங்களுடன் இருந்த பனைமர தோப்பினை வாங்கி இழந்துபோன பனை மர தொழிலை மீண்டும் தொடங்கி உள்ளனர்.
அரசு அனுமதியுடன் பனை மரத்தில் பதநீர் இறக்கும் தொழிலை செய்ய முடிவெடுத்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து பனையேறும் தொழிலாளர்கள் 4 பேரை வரவழைத்து ஒரு நபருக்கு 25 பனைமரம் வீதம் 4 பேர் மூன்று வேளை பனை மரத்தில் ஏறி தினமும் காலை 80 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை பதநீர் இறக்கி விற்பனை செய்கின்றனர்.
மீதமுள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி விற்பனையும் செங்குன்றம், பொன்னேரி, தாம்பரம், சோழவரம், அம்பத்தூர், கொளத்தூர், மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதியில் பதநீர் வாங்க ஒரு நாளைக்கு முன்பாக ஆர்டர் கொடுத்து தினமும் பதநீர் வாங்கி செல்கின்றனர்.
சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகமான பேர் குடும்பமாக வாகனங்களில் வந்து நுங்குடன் சேர்த்து பதநீர் அருந்தி செல்கின்றனர்.
இதுகுறித்து அகிலன் கூறியதாவது, பனைமரம் மிகச் சிறந்த மரமாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன் தரக்கூடியது எனது தாத்தா காலத்தில் இருந்தே பனை தொழில் செய்து வருகிறேன்.
காலப்போக்கில் பனையேறுவதற்கு ஆட்கள் இல்லாததால் குறைவாக காணப்பட்டதால் பனைமர தொழிலை பாதுகாக்கவும் இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லவும் ஊக்குவிக்கவும், கடந்த 2011 ல் தோட்டத்தினை வாங்கி ஆடு, மாடு, கோழி மற்றும் தோட்டம் அமைத்து கிராம சூழ்நிலை போல் காணப்படும் தோட்டத்தில் ஊரில் இருந்து 4 தொழிலாளர்களை வரவழைத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறேன்.
பதநீர் பற்றி தெரியாதவர்களுக்கு குடிக்க இலவசமாக கொடுத்து அதனுடைய பயன்களை விளக்கி சொல்லி வருகிறேன். கடந்த 2 வருடமாக அரசு அனுமதியுடன் தொழில் நடத்தி வருகிறேன்.
பனை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களும் பயன்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் மே, ஜூன் மாதம் வரை பதநீர் கிடைக்கும். இதில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுவதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். பதநீர் சாப்பிட்டவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படும். உடலை குளிர்ச்சி படுத்தக்கூடியது. ரத்த சோகையை போக்கும் எனவும் பேன் தொல்லை இருப்பவர்கள் தலையில் பதநீர் ஊற்றி குளித்தால் முழுவதும் நீங்கி விடுவதாகவும் வயிறு எரிச்சல் அல்சர் நீங்குவதாகவும் நுங்கு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு தணியும் உடல் குளிர்ச்சி தரும். அதிகமான சத்துக்கள் நிறைந்தது சுகர் இருப்பவர்கள் நுங்கு தோவினை சேர்த்து சாப்பிடும்போது சுகர் குறைகிறது.
கோடை காலத்தில் உடலில் வேர்க்குரு இருப்பவர்கள் தேய்த்து குளித்தால் வேர்க்குரு நீங்குகிறது. கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். சுகர் இருப்பவர்கள் சாப்பிட்டால் சுகர் குறையும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் இரண்டே நாளில் குணமாகும் நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் ஜிங்க் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கோடை வெயிலில் தாக்கும் அதிகமான நோயான அம்மை நோய் வருவதை எளிதில் தடுக்கக் கூடியது சாலை ஓரங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளன. இவை ஒரிஜினல் பதநீர் தானா என சரி பார்த்து குடிக்க வேண்டும்.
கருப்பட்டி போலியான கருப்பட்டி சாலை ஓரங்களில் விற்கப்படுவதாயிலும் போலிகளை கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பிடும் பொருளில் சாலை ஓரங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதால் வயிற்றுப்போக்கு அதிக சுகர் ஒவ்வாமை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் கடற்கரை ஓரங்களில் நடுவதற்கு கொடுத்தேன்.
இதுகுறித்து பனைமரம் ஏறும் தொழிலாளிகள் பன்னீர், சண்முகம் கூறியதாவது:-
அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும். தொழில் செய்ய தொழிலாளர்களுக்கு லோன் வசதி மற்றும் பென்ஷன் வழங்க வேண்டும். பனங்கருப்பட்டியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். கலப்படம் செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் கும்பல் வந்து விட்டதால் கருப்பட்டியை பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
- ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.
அதன்படி நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் மே வரை 2½ டி.எம்.சி.கிருஷ்ணா தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் கிருஷ்ணா தண்ணீரை உடனே தருமாறு வலியுறுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதின் காரணமாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியது.
இப்போது கோடை காலமாக இருப்பதால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
ஆனால் கண்டலேறு அணையில் இப்போது 6 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. (கொள்ளளவு 68 டி.எம்.சி.) இதனால் கிருஷ்ணா தண்ணீரை இப்போது திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு கூறி உள்ளது.
4 மாதமாக அணை திறக்கப்படாத நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் இப்போது 6.980 டி.எம்.சி. (கொள்ளளவு 13.213 டி.எம்.சி.)தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வருவதாலும் குடிநீரை கட்டுப்பாடின்றி வினியோகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர குன்றத்தூர் திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் அதை வைத்து குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.
செங்குன்றம்:
செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் 46 -ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு. ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1008 கிலோ குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் செங்குன்றம், பாடிய நல்லூர், புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து குங்குமம் மற்றும் பிரசாதங்களை பெற்று சென்றனர்.
ஆலய தர்மகர்த்தா ஆர். ராஜா சுவாமிகள் கூறுகையில், பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அஷ்ட காளி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கணபதி ஓமம் மற்றும் கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக மங்கள சண்டிஹோமமும், அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். பால்குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி சிரசில் ஏந்திய வண்ணம் ஆலமரம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடையும்.
அதனைத் தொடர்ந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி பவனி வருதல், அம்பாளுக்கு பூச்சோரல் விழா, அக்னி கப்பறை கரத்தில் ஏந்திய வண்ணம் வீதி உலா, அம்பாளுக்கு தூப தீப ஆராதனைகளும் நடைபெறும்.
அம்பாள் தனது அடியார்களுடன் தீ மிதித்தல் என்னும் பூக்குண்டத்தில் திருநடனம் புரிதல், மஞ்சள் நீராட்டு விழா, சுமங்கலி பூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஆகையால் பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்