search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
    • காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது.

    இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இதில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


    இந்நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

    இந்நிலையில் வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.முநாசர், திமுக எம்எல்ஏக்கள் வி. ஜி ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்பட 5 பேர் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான த.பிரபுசங்கரிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் தேர்தல் விதிகளை மீறி 6 பேர் இருப்பதால் ஒருவர் வெளியேற வேண்டும் என எச்சரித்தார்.

    இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திடீரென்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான போலீசாரின் சோதனை எவ்வாறு உள்ளது? அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சோதனைச்சாவடி இந்த எளாவூர் சோதனைச்சாவடி ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த எளாவூர் சோதனைச்சாவடி என்பது, ஆந்திர மாநிலம் இருந்து விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கான முக்கியமான நுழைவு வாயில் ஆகும். அதனால் இங்கு எல்லா வாகனங்களும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பணியில் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச்சாவடி இன்றி சுற்றி உள்ள பிற வழிகளில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஆந்திர போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாடி மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அரியானா மாநிலம் பதிவு எண்கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. லாரியில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தினர். இன்று காலை ஏராளமான தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டெய்னர் பெட்டியை திறந்து சோதனை செய்த போது முதலில் இருந்த சில மூட்டைகளில் பா.ஜனதா கட்சியின் கொடி, தொப்பிகள் இருந்தன. பின்னர் இருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் கண்டெய்னர் பெட்டியை பூட்டினர்.

    மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணம் பிடிபட்டு இருப்பதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் பள்ளி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது அதில் இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தேர்தல் அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் கண்டெய்னர் லாரி பற்றிய பரபரப்பு நீடித்து வருகிறது.

    இதுகுறித்து கண்டெய்னர் லாரியை சோதனை செய்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். இதற்கிடையே லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

    தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    சென்னை அருகே புழல் சிறையில் வளாகத்தில் விசாரணைக் கைதி சிறை செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 6 மணியளவில் தங்களது அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சிறையின் இரண்டாவது பிளாக் பகுதியில் இருக்கும் கைதிகள் சுமார் 40 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் கைதிகள், சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிற்பகலில் கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்
    • எல்லா தேர்தல் நேரங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்

    அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அக்கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இதய நோய், புற்றுநோய். காசநோய் மேலும் உடலில் பலதரப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பமுற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியைகளின் மருத்துவ அறிக்கையை பெற்று விலக்களிக்க வேண்டும்

    அதாவது எல்லா தேர்தல் நேரங்களிலும் இதுபோன்று பாதிப்புள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சிரமத்தை போக்க ஒவ்வொரு தாலுக்கா அலுவலகங்களிலும் இதற்கென தனி அலுவலர்களை நியமித்து அவர்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

    அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு மருத்துவர் தீபக் கோக்ரா துங்கார்பூர் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அது மட்டுமின்றி அவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அரசு பணி வழங்க வேண்டும் என உத்தரவு அளித்ததை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு இருந்ததை சுட்டிக்காட்டிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு, இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

    வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
    • 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.

    மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.

    திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்

    நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.

    மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்

    திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.

    உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

    பா.ஜ.க.வின் சாதனைகள் பற்றி பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு இதுபோன்ற திட்டங்களை செய்திருக்கின்ற பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.


    பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் நின்றபடி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பும், சிரிப்பலையும் எழுந்தது. உடனே சுதாரித்த அத்திப்பட்டு துரைக்கண்ணு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பழக்க தோஷத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டு கொண்டார்.

    பா.ஜ.க. மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு அதனை தொடர்ந்து பேசும் போது அருகில் நின்றிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் தாமரை சின்னம் என பேசுமாறு எடுத்து கொடுத்தனர். பா.ஜ.க. மேடையில் மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
    • ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு கடற்கரை பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. இவை ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.

    கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது. மேலும் ஆமையின் முட்டைகளை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க வனத்து றையினருடன் இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினரும் களத்தில் இறங்கினர்.

    அவர்கள் பழவேற்காடு கடற்கரையோரத்தில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்தனர்.

    கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 9,700 முட்டை சேகரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் இந்த முட்டைகள் தற்போது குஞ்சு பொரிக்கத்தொடங்கி உள்ளன. இந்த ஆமை குஞ்சுகளை மீண்டும் கட லில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக பிறந்த 1,121 ஆமைக்குஞ்சு களை வனச்சரகர் அலுவலர் ரூஸப் லெஸ்லி தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு கடலில் விட்டனர்.

    • அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.


    மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    • விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    ×