search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
    • ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பொன்னேரி,ஜன.5-

    மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும்.
    • நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது.

    அப்போது கட்டிடம் அருகில் உள்ள 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

    நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, நகர அமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் இன்று காலை வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
    • மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 மில்லியன் கன அடி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 34.75 அடியாகவும் உள்ளது. தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையின் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று பிற்பகலில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடல் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு போலீஸ் படையுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அழுகிய நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாகவே உடல் காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட வாலிபரை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளிகள் உடலை 6 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடலை மட்டும் ஏரியில் வீசியுள்ளனர். ஒரு காலையும் அங்கேயே போட்டுவிட்டு மற்ற உடல் பாகங்களை வேறு எங்கேயோ வீசியுள்ளனர்.

    தலையில்லாத உடல் பகுதி மற்றும் ஒரு காலை மட்டுமே அங்கு சிக்கியுள்ள நிலையில் தலை மற்றும் இன்னொரு கால், கைகள் ஆகியவை ஏரிக்குள்ளேயே வீசப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மூலமாக உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காண்பதற்கான பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

    குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாயமாகியுள்ள வாலிபர்களின் பட்டியலை சேகரித்துள்ள போலீசார் அவர்களின் கதி என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


    கொலையாளிகள் வேறு எங்கேயாவது வைத்து கொலை செய்துவிட்டு உடலை மட்டும் கல்லால் கட்டி ஏரியில் தூக்கி வீசி இருக்கலாம் என்றும், மற்ற உடல் பாகங்களை ஏதாவது காட்டுப் பகுதியிலோ, அல்லது குப்பை மேடுகளிலோ வீசி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து சுற்று வட்டார பகுதிகளில் குப்பை மேடுகள் மற்றும் புதர்கள் மண்டியுள்ள இடங்களிலும் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தனிப் படை போலீசார் அந்த பகுதி முழுவதுமே கண் காணித்து வருகிறார்கள்.

    3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே வாலிபரை கொன்று இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஏரியில் உடலை வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலை மற்றும் கைகள், கால் ஆகியவை கிடைத்தால் மட்டுமே கொலை வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அப்பகுதியில் அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அதை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த டி.சர்ட்டில் "தி டிரம்மர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த அடையாளங்களும் இல்லை. இதுபோன்று ஆடைகள் கிடைக்கும்போது காலரின் பின்னால் டெய்லர் கடையின் பெயர் இருக்கும். அதை வைத்து இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் துப்புதுலக்கி உள்ளனர்.

    ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியில் கைப்பற்றப்பட்ட டி.சர்ட் ரெடிமேட் டிசர்ட்டாக உள்ளது. இதனால் அதனை வைத்து துப்பு துலக்க முடியாத நிலையே இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் இது கொலையுண்ட நபர் அணிந்திருந்த 'டி.சர்ட்' தானா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொலையாளிகள் போலீசாரை சுற்றவிட வேண்டும் என்கிற எண்ணத்திலும், கொலையுண்ட நபரை எந்த வழியிலும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த உஷாராக செயல்பட்டுள்ளனர்.

    இதன்காரணமாகவே கொலையாளிகள் தலை மற்றும் உடல் பாகங்கள் இல்லாத உடலை மட்டும் ஏரியில் வீசிட்டு சென்றிருக்கிறார்கள்.

    இதையடுத்து இந்த கொலை வழக்கை போலீசார் சவாலாக ஏற்றுக் கொண்டு துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் நிலங்களே அதிக அளவில் உள்ளதால் கேமராக்களும் பொறுத்தப்படவில்லை. இருப்பினும் வாலிபர் கொலை வழக்கில் சரியான துப்பு எதுவும் துலங்காததால் பொலீசார் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆங்கில புத்தாண்டை யொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்குள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

    திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளுக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி ஒவ்வொரு படிக்கும் தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட உள்ளது.

    மேலும் நாளை காலை 10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர் காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர்.

    மேலும், ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு தரிசனம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. மேலும் மலைக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் மூலவரை தரிசனம் செய்வதற்கு வரிசை அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் மலைக்கோவிலுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் விடப்பட்டுள்ள பஸ்களில் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரில் வீரராகவர் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சிவா விஷ்ணு கோவில், திருப்பாச்சூர் வாசீஷ்வரர் கோவில், திருவா லங்காடு வடார ண்யேஸ்வரர் கோவில், காக்களூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துகு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவில்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட உள்ளன. காஞ்சிபுரம் வரதரா ஜபெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசன செய்யலாம். வல்லக்கோட்டை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருப்போரூர் முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலையிலிருந்து இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கென அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் திருக்கோயிலில் 1-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மீஞ்சூர் முப்பத்தி அம்மன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

    இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக உள்ளது. ஆண்டுக்கு 365 நாட்கள் வருவதை குறிக்கும் வகையில் மலைக்கோயிலுக்கு சென்று வர 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 31-ந்தேதி திருத்தணி கோவிலில் திருப்படிதிருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    படித்திருவிழாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பஜனை கோஷ்டியினர் காலை முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். பக்தர்கள் அனைத்து படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்வார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி 31-ந்தேதி நள்ளிரவு தரினம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. விழாவையொட்டி மலைக்கோவில், வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் அறங்காலங்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகன், உஷா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சரிசெய்யப்பட்டு உள்ளது. இப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. படித்திருவிழாவின் போது மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்ககளையும் அனுமதிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே கேட் உள்ளது.

    இது திருவொற்றியூர் மேற்கு பகுதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இடம் ஆகும். தினந்தோறும் சுமார் 60 முதல் 70 ரெயில்கள் வரை இந்த பாதை வழியாக செல்வதால் பெரும்பாலும் மூடிகிடக்கும். இதனால் இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபக்கத்திலும் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போது ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தெடர்ந்து விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடி செலவில் 343 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. 1½ ஆண்டுகளில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த எண்ணெய் படலம் கடலில் பழவேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள மீனவ கிராமமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஏற்கனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பி டிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராமமக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் 40 மீனவ கிராமமக்கள் நிவாரணம் கேட்டு நாளை சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்து போராட்டம் அறிவித்து உள்ளனர்.இதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திலும் மனு அளித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுதாகர், திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் மீனவ கிராம மக்களை அழைத்து பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்ட பத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மாவட்ட கலெக்டர் தலைைமயில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க திட்டும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 40 கிராமமீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன் பிடிக்க செல்லவில்லை. எண்ணை கழிவால் ஆயிர த்திற்கும் மேற்பட்டமீன்பிடி வலைகள் படகுகள் சேதமடைந்துள்ளன. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிராம மக்கள் முடிவெடுத்து பேரணியில் குடும்பமாக பழவேற்காடு, பொன்னேரி ,மீஞ்சூர், திருவெற்றியூர் சாலை வழியாக சென்னை கோட்டை வரை நடந்தே சென்று கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றார்.

    ×