search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
    • ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1091 கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பும் 1500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3284 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இதேபோல் புழல், சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 239 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பு 239 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 20.21 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 3054மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 790மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2924மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1610கனஅடி தண்ணீர் வருகிறது. 1009 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 118 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர்.
    • கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
    • புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.

    பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.


    பொன்னேரி அடுத்த சின்ன காவனம், பெரிய காவனம், உப்பளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர், மற்றும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு அவர்கள் மின்சாரம் வழங்க கோரி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பங்குகளில் பெட்ரோல் டீசல் இல்லாததால் பொன்னேரியில் இருந்து பாட்டில்களில் வாங்கப்படும் பெட்ரோலை சிலர் ஒரு லிட்டர் ரூ.140 -க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு மற்றும் அனுப்பப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 34 மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதானது. இதனால் 5 நாட்களாக கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பவில்லை. பழதடைந்த மின்மோட்டர்களை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சன்முகநாதன்,மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாகப் பொறியாளர் அமலதீபன், உதவிப் பொறியாளர்கள் சம்பத், தமிழ்மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் 784 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்திர் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.

    • மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.

    திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.
    • கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பெரியபாளையம்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட கும்மிடிபூண்டி ஒன்றியத்தில் உள்ள கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம், மாநெல்லூர், நேமளூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.வி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதில் டி.ஜே.ஜி. தமிழரசன், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், நிர்வாகிகள் நெல்வாய் மூர்த்தி, கவரப்பேட்டை திருமலை, ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதி, புலியூர் புருஷோத்தமன், திருஞானம், பிரசாத், இஸ்மாயில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் பொன்னி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஜோதிபிரகாசம், திவ்யா, அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.
    • மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் பாதிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமலேயே உள்ளது.

    குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்றும் முழுமையாக வடியாமல் இருக்கிறது. இதே போன்று சென்னை மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.

    புழல் விளாங்காடுப் பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாள்நகர், தர்காஸ், மல்லிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் மல்லிகா கார்டன் அருகே உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்புகளில் மார்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் கடந்த 5 நாட்களாக வடிந்தும் தற்போதுதான் முட்டளவுக்கு குறைந்துள்ளது.


    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஏற்படும் வெள்ளப் பாதிப்பை சரி செய்ய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோன்று செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கூளங்களும் தேங்க தொடங்கி உள்ளன. எனவே அவைகளை அப்புறப்படுத்தி மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • திருவள்ளூரில் பல்வேறு பகுதிகள் மிச்சாங் புயலால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • தற்போது மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மரங்கள் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களிலும், செங்கல்பட்டில் 6 தாலுகாக்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி, சின்னக்காவனம், தத்தை மஞ்சி ஆகிய 3 இடங்களில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் சூறைக்காற்றில் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் 4-வது நாளான இன்னும் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் மின்சப்ளை சீராகவில்லை. பொன்னேரி மூகா ம்பிகை நகர், சின்ன க்காவனம், பழவேற்காடு வைரங்குப்பம், கரிமணல், தாழங்குப்பம், பிரளயம்பாக்கம் சோமஞ்சேரி, கம்மார் பாளையம், மீஞ்சூர் அத்திப்ப ட்டு புதுநகர், மேலூர், அரியன்வாயல் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் மின்தடை உள்ளதால் பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் படகில் சென்று வருகிறார்கள்.

    • சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று.
    • மிச்சாங் புயல் காரணமாக கரை உடைந்ததாக செய்திகள் வெளியாகின.

    புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும்.

    இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மிச்சாங் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

    அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

    இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு செயற்பொறியாளர்,நீவது., கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், திருவள்ளூர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

    இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×