search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    • சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்வதும், குரைப்பதும் என அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்ப டுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11-வது வார்டில் இன்று காலை சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவர்களை கண்டதும் தப்பி ஓட முயன்ற நாய்களை விரட்டி சென்று வலை கூண்டை வீசி பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றனர். தெருக்களில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணி இன்னும் வரும் நாட்களிலும் தொடர்நது நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்து உள்ளார்.

    • 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 பேர் பலியானார்கள்.

    இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது
    • நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் தனது வீட்டில் லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டில் வைத்து ஆசையாக வளர்த்து வந்தார்.அந்த கூண்டை வீட்டு முன்பு உள்ள சுவற்றில் வைத்து இருந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் இருந்த லவ் பேர்ட்ஸ் பறவைகளின் கூண்டிற்குள் குறுகிய இரும்பு கம்பிகளுக்கு இடையே புகுந்து நல்லபாம்பு ஒன்று நுழைந்தது.

    அந்த பாம்பு லவ் பேர்ட்ஸ் பறவையை உயிருடன் விழுங்கியது. ஒருபறவையை விழுங்கிய பின்னர் அந்த பாம்பு மற்றொரு பறவையை பிடிக்க முயன்றபோது கத்தத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த ஜோஸ்வா வெளியே வந்து பார்த்த போது லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உயிருடன் இருந்த மற்றொரு லவ் பேர்ட்ஸ் பறவயை பத்திரமாக மீட்டார். லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது.

    இதனால் கூண்டின் சிறியகம்பிகளுக்கு இடையே புகுந்து நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பாம்பையும் மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் லவ் பேர்ட்சை ருசித்த மகிழ்ச்சியில் நல்ல பாம்பு தப்பித்தோம் என்று அங்கிருந்து பாய்ந்து சென்றது. ஆனால் தனது ஜோடியை பறிகொடுத்த மற்றொரு லவ்பேர்ட்ஸ் கத்தியபடி பயத்தில் காணப்பட்டது.

    • கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் முகத்து வாரம் மணல் சேர்ந்து அடைபட்டத்தால் அப்பகுதியை சுற்று உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

    கடற்கரை அருகில் உள்ள கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் ஏரி பகுதியில் பிடிபடும் நண்டு, இறால்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன. ஒரு கிலோ நண்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் இறால் கிலோ ரூ.500 முதல் 800 வரையும், மடவை மீன் ரூ.300 முதல் 500 வரையும் விற்பனை செய்யபடுகிறது.

    • பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சதிஷ் குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

    சதிஷ்குமார் ஏற்கனவே பலமுறை ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் உடந்தையா? யாருக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆறு நாட்கள் திருவிழாவான கந்த சஷ்டி உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

    திங்கட்கிழமை காலை கந்த சஷ்டி திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை காலை- மாலை யாகசாலை பூஜைகள், சுவாமி உள்புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

    வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. நேற்று மதியம் ஸ்ரீசண்முகர் அபிஷேகமும், மாலை ஸ்ரீ சண்முகர்வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மாலை மண்ணடி அருகே உள்ள வடக்கு தெருவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்பொழுது மனிதன், ஆடு, சிம்மம், யானை, யாழி உள்ளிட்ட ஆறு உருவங்களில் சூராபத்மன் உருவெடுத்து முருகனிடம் போரிடுகிறார். முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர், மா மரத்தில் சூரபத்மன் தஞ்சம் அடைகிறார். எனவே, முருகர் மரத்தை பிளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சூரபத்மனின் வேண்டுதலை ஏற்று மயிலாகவும், சேவலாகவும் மாற்றி முருகர் தனது இரு பக்கங்களில் வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை காலை சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற சூரசம்கார

    நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.150.05 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பஸ்கள் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறியும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

    இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பஸ்நிலையம் அருகே போக்குவரத்து பணிமனையும் உள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அம்பத்தூர் பஸ்நிலையம் எந்தவித நவீன வசதியும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. பஸ்கள் உள்ளே வரும் பகுதியும் வெளியே செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் சுமார் 1 அடிக்கு மழை நீர் தேங்கி நிற்கும். இதேபோல் பஸ் நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் ஓடுகள் உடைந்தும் பரிதாபமாக உள்ளது. இதையடுத்து அம்பத்தூர் பஸ் நிலையத்தை நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.150.05 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அம்பத்தூர் பஸ்நிலையத்தை ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணிகளும் நடக்க உள்ளது. இதற்கு பொது மக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    தற்போது உள்ள அம்பத்தூர் பஸ் நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. மாநகர பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி பாதை, நேரக்காப்பாளர் அறை, கழிப்பிட வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.

    மேலும் பஸ்கள் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறியும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பஸ்நிலையம் பணிகள் நடைபெற உள்ளது. வாகன நிறுத்தும் இடம், கடைகளும் அமைய உள்ளன.

    இதுகுறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல் கூறும்போது, அம்பத்தூர் பஸ்நிலையம் ரூ.13.85 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போது உள்ள பஸ் நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு நவீன வசதியுடன் அமையும் என்றார்.

    • சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார்.
    • யூடியூப்பர் 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 'தமிழ் உங்களில் ஒருவன்' என்ற யூடியூப் சேனலை அடிக்கடி பார்ப்பது வழக்கம். இதையடுத்து அந்த யூடியூப் சேனலைஅதை நடத்தி வரும் தமிழழகன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக தமிழழகனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். தமிழழகன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து விட்டதாகவும் தங்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் சற்று விலகி இருக்குமாறும், பிரச்சனை முடிந்தவுடன் வீட்டில் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி அந்த இளம்பெண்ணை சமாதானப்படுத்தி உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தமிழழகன் சொல்வது பொய் என தெரிந்த அந்த பெண் தமிழழகனிடம் கேட்டபோது அவரை அழைத்து சென்று மீண்டும் உல்லாசமாக இருந்து விட்டு இனி தான் சொல்லும் வரை என்னை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார். ஆனால் திருமணத்துக்கு தமிழழகன் மறுத்து உள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகப்பேர் பகுதியை சேர்ந்த யூடியூப்பர் தமிழழகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழழகன் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து யூடியூப்பர் தமிழழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யூடியூப்பில் பெண்ணுரிமை, பெண்களின் நன்மை, பெண்களை அழ வைக்கக் கூடாது, பெண் பாவம் பொல்லாதது என்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்த யூடியூப்பர், 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    • தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.

    பூந்தமல்லி:

    படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

    அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.

    குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.

    இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.

    • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
    • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×