search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு திருநாள் - கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
    X

    வண்ண விளக்குகளில் மின்னும் மார்ஷல் நேசமணி மணிமண்டபம்

    தமிழ்நாடு திருநாள் - கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

    • சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • மெரினா கடற்கரையில் ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் உருவாக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967)-ம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா 18.07.2022 (இன்று) காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு உருவான வரலாறு என்ற தலைப்பில் சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும் என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதனும், தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள் என்ற தலைப்பில் வாலாசா வல்லவனும், தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன் என்ற தலைப்பில் முனைவர் ம. இராசேந்திரனும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனும் கருத்துரையாற்றுகிறார்கள்.




    மின்னொளியில் ஜொலிக்கும் தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபம்

    கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய வகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத்துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

    இவ்விழாவினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

    கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மணற்சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழிப் பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது.

    சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை 18.07.2022 முதல் 20.07.2022 வரை 3 நாள் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கண்காட்சிகளை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×