search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பற்களை பிடுங்கிய விவகாரம்- அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
    X

    பற்களை பிடுங்கிய விவகாரம்- அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

    • தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
    • சர்ச்சைக்குள்ளான போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்பட சில போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இந்த போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுஜித் ஆனந்த் வி.கே.புரத்திற்கும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×