search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய பெய்த கனமழை
    X

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய பெய்த கனமழை

    • முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்குள் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை மழையும் சரிவர பெய்யாதததால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று மாலை ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. இந்த கோடை மழை அவ்வப்போது நின்று நின்று பெய்தது.

    பின்னர் நள்ளிரவு முதல் விடிய விடிய ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணிமண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மழை காரணமாக நேற்று இரவு ராமேசுவரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் ஆன பின்னும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதியடைந்தனர். இன்று காலை 7 மணிக்கு ராமேசுவரத்திற்கு மின்விநியோகம் செய்யப்பட்டது.

    ராமேசுவரம் மன்னார்வளைகுடா, பாக்நீரினை கடலில் 55 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்து மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெய்லானி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டியில் மழை பெய்தது. மதுரை நகரில் நேற்று மாலை குளிர்ந்த காற்றும் வீசியது. அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது.

    பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், கைத்தறிநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த வாரம் முழுவதும் 105 டிகிரிக்கு வெயில் பதிவாகி வந்த நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக மதுரை நகரில் மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×