search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
    X

    தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    • மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் தொடர் மழை பெய்து குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், ஐந்திணை பூங்கா போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

    குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இயற்கை அழகை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.

    தொடர் மழை காரணமாக ஏற்காடு மலையின் பல்வேறு பகுதிகளில் அருவிகள் உருவாகி உள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு மலை பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வரவில்லை.

    சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏற்காடு வாழ் இளைஞர்கள் தாங்களாகவே மரங்களையும் மரக்கிளைகளையும் அகற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×