search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் அழுத்த நோய் சிகிச்சை: அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு மனித சங்கிலி

    • தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் ஹிட்லர் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
    • எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும் என கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா பேச்சு

    சென்னை:

    கண் மருத்துவத்தில் மிகப்பெரிய மற்றும் பிரபல மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக ஒரு மனிதச்சங்கிலி நிகழ்வை சென்னையில் நடத்தியது. உலக கண் அழுத்த நோய் வாரம் (மார்ச் 12-18, 2023), அனுசரிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இது நடத்தப்பட்டது.

    அதிகரித்த அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து குருடாக்கும் தன்மை கொண்ட இந்த கண் அழுத்த நோய் குறித்தும் மற்றும் அதற்கு உரிய சிகிச்சையை தொடக்க நிலையிலேயே பெற வேண்டிய அவசியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதே உலக கண் அழுத்த நோய் வாரம் அனுசரிக்கப்படுவதன் குறிக்கோளாகும். எனவே இதனையொட்டி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இம்மாநகரில் வாக்கத்தான் நிகழ்வையும் மற்றும் மனிதச்சங்கிலி நிகழ்வையும் ஏற்பாடு செய்து நடத்தியது. டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பல்வேறு வயது பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட, 150-க்கும் அதிகமான நபர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) ஹிட்லர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர். ஸ்ரீனிவாச ராவ் இதுதொடர்பாக கூறியதாவது:

    மீண்டும் சரிசெய்ய முடியாத பார்வைத்திறனிழப்பிற்கு (குருடாதல்) இட்டுச்செல்லும் கண் கோளாறுகளின் ஒரு தொகுப்பான கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மிக அதிக எண்ணிக்கையில் மக்களிடம் காணப்படுவதால், உலகளவில் இந்நோய்க்கான தலைநகரமாக இந்தியாவை குறிப்பிடலாம். இந்தியாவில் கண் அழுத்த நோயால் 12 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் 1.2 மில்லியன் நபர்கள் பார்வையற்றவர்களாக இதனால் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். பிரைமரி ஆங்கிள் குளோஷர் நோய் (முதன்மை கோண மூடல்) பாதிப்பு தென்னிந்தியாவில் 1.58% என்ற அளவில் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் கிராமப்புற மக்களிடையே POAG (முதன்மை திறந்தகோண கண் அழுத்த நோய்) பாதிப்பு 1.62% ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுள் 98.5% சதவிகித நபர்கள் இந்நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இதுவே நகர்ப்புற மக்களில் 3.51% என உயர்வான விகிதத்தில் காணப்படுகிறது. இவர்களுள் 90% - க்கும் கூடுதலான நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு பங்களிப்பு இருப்பது தெரியாது என்ற தரவு வருத்தத்திற்குரியது.

    கண் அழுத்த நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கு இதுவரை அறியப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்துவதில்லை என்பதால், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்வதும் மற்றும் உகந்த சிகிச்சையைப் பெறுவதுமே பார்வையைப் பறிக்கின்ற இந்த கடுமையான நோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறையாகும். கண் அழுத்த நோயின் காரணமாக, பார்வை முற்றிலும் பறிபோகாமல் தடுப்பதற்கு இதுவே ஒரே வழிமுறையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா பேசுகையில், "எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கண் அழுத்த நோய் பாதிப்பு வரலாற்றைக் குடும்பத்தில் கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர்ந்த ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், ஸ்டீராய்டை உள்ளடக்கிய கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சருமக் க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் கண் அழுத்த நோயால் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய இடர்வாய்ப்புள்ள நபர்களாக கருதப்படுகின்றனர். இத்தகைய நபர்கள் கண் அழுத்த நோய் தங்களுக்கு இருக்கிறதா என்று அறிவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." என்று கூறினார்.

    Next Story
    ×