search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லுக்கான பணத்தை கொடுப்பதில் தாமதம்: அரிசி ஆலை உரிமையாளரை காருடன் கடத்திய 4 பேர் கைது
    X

    நெல்லுக்கான பணத்தை கொடுப்பதில் தாமதம்: அரிசி ஆலை உரிமையாளரை காருடன் கடத்திய 4 பேர் கைது

    • தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் உதயகுமார்(வயது 32). தொழிலதிபர். இவர் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

    இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் நெல் கொள்முதல் செய்துள்ளார். சுமார் ரூ.98 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்த அவர், வாங்கிய நெல் மூட்டைகளை அரிசியாக்கி விற்றுள்ளார். அதில் ரூ.70 லட்சம் வரையிலான நெல்லுக்கான தொகையை திருப்பி ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    மீதி தொகையை நெல் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்க தாமதித்து வந்துள்ளார். நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை விற்கப்பட்ட உடனே தொகைகளை ஒப்படைப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    ஆனால் கால தாமதம் ஏற்படவே, நேற்று கடலூரில் இருந்து நெல் கொடுத்தவர்களான அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரும் வெங்கடாம்பட்டியில் இருக்கும் உதயகுமாரின் ரைஸ்மில்லுக்கு வந்துள்ளனர்.

    அங்கு உதயகுமாரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த கும்பல், உதயகுமாரை அவரது காரில் ஏற்றியது. பின்னர் அங்கிருந்து கடலூர் நோக்கி கடத்தி சென்றது. இந்த தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கடத்தல் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடினார்.

    உதயகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிக்னல் பெரம்பலூர் பகுதியை காண்பித்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு விடுதி பகுதியில் உதயகுமாரின் கார் நின்றது. அதில் அவரை அந்த கும்பல் கடத்தி வைத்திருந்தது.

    இதையடுத்து உதயகுமாரை மீட்ட போலீசார், அவரை கடத்தியதாக கடலூரை சேர்ந்த அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் கடையத்திற்கு அழைத்து வரப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×