search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-போக்குவரத்து மாற்றம்

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு சிம்ம, பூத, அன்ன, ரிஷப, யானை, சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (18-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்த்தேக்கத் தொட்டி வைக்கப்பட்டு வருவதுடன், தேர் சக்கரங்கள் முழுவதும் வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படுகிறது.நாளை மறுநாள் (புதன்கிழமை) அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாதரனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி செய்து வருகின்றார்.

    இதனையடுத்து தேர் திருவிழா முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பெட்டவாத்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்லவேண்டும். சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களும் இதே வழியில் வரவேண்டும்.

    திண்டுக்கல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறையில் இருந்து ஆண்டவர் கோவில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.மதுரை மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர் கோவில் சோதனை சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

    திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் 'ஒய்' ரோடு சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட் ரோடு, சிறுகனூர் ஜங்ஷன் வழியாக சென்னை சாலையை அடைய வேண்டும். சென்னையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும்.

    சென்னை சாலையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர் ஜங்ஷன், லால்குடி ஜங்ஷன், கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×