search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் ரூ.13 கோடி செலவில் சர் சி.வி.ராமன் அறிவியல் பூங்கா பணிகள் மும்முரம்
    X

    திருச்சியில் ரூ.13 கோடி செலவில் சர் சி.வி.ராமன் அறிவியல் பூங்கா பணிகள் மும்முரம்

    • திருச்சியில் ரூ.13 கோடி செலவில் அமையவுள்ள சர் சி.வி.ராமன் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
    • வருகிற செப்டம்பர் மாதம் அனைத்து பணிகளையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகர மக்கள் பொழுது போக்கும் வகையில் திரும்பும் திசையெல்லாம் பூங்காக்கள் நிரம்ப இருக்கின்றன. அதில் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. நடைப்பயிற்சிக்கான வசதிகள் இருக்கிறது.

    ஆனால் அறிவியல் பூர்வமான விஷயங்களை கற்றுக்கொள்ள சிறப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. தென்னூர் பகுதியில் அறிவியல் பூங்கா உள்ளது. ஆனால் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அங்கு செயல் இழந்து கிடக்கிறது.

    இந்த நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு என பிரத்யேக பூங்கா ஒன்று திருச்சி மாநகராட்சி சார்பில் அமைகிறது.

    மாணவர்களின் அறிவியல், பொறியியல் திறன் அறிவினை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகாமையில் சர். சி.வி.ராமன் பெயரில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இயற்கை எழில் சூழ்ந்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரூ.13 கோடி செலவில் இந்த பூங்கா அமைகிறது.

    இதன் கட்டுமான பணிகள் கடந்த 2021 ஆகஸ்டு மாதம் தொடங்கியது. இந்த பூங்காவில் மினி தியேட்டர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் நூறு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தியேட்டரில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் ஒரு மணி நேரம் திரையில் ஒளிபரப்பாகும்.

    அதேபோன்று நவீன கோளரங்கமும் அமைத்து வருகின்றனர். இதில் கோள்களின் செயல்பாடுகள், விண்வெளி ஆராய்ச்சிகள் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 இருக்கைகள் அமைக்கப்படுகிறது.

    மேலும் காற்று எதனால் மாசுபடுகிறது? அதனைத் தவிர்ப்பது எப்படி? மழைநீர் சேகரிப்பு அறிவியல் விளக்கம் போன்றவை இடம்பெற்றுள்ளது. இது தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    அது மட்டுமல்லாமல் காபி பார், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவையும் இடம்பெறுகிறது. மினி தியேட்டர், கோளரங்கம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வருகிற செப்டம்பர் மாதம் அனைத்து பணிகளையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×