search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எப்போது திறப்பீங்க...
    X

    எப்போது திறப்பீங்க...

    • மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரிஸ்டோ தொங்கு பாலம் திறப்பு எப்போது?
    • மேலும் காலம் தாழ்த்துவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

    திருச்சி,

    தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எங்கு பார்த்தாலும் நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பஸ் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான போக்குவரத்து இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஆக்டோபஸ் எனும் அரிஸ்டோ மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.இந்தப் பணிகள் 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ஆரம்பத்தில் ரூ.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2 கட்டங்களாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி கையில் எடுக்கப்பட்டது.இதில் சென்னை, மதுரை சாலையை இணைக்கும் மேம்பால பணி ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தப்பட்டு அது தொங்கு பாலமாக மாறியது. சொற்ப ராணுவ நிலத்தை கையகப்படுத்த நீண்ட, நெடிய போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இதன் காரணமாக இந்த பாலம் முழுமை அடையாமல் 8 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.இதற்கிடையே முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை 2018-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை, கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப்பணிகளுக்கான இடத்தினை வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.அதன்படி கடந்த ஆண்டு தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணிகள் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது.

    தற்போது ஒரு வழியாக பாலத்தை கட்டி முடித்து விட்டனர். இருப்பினும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் வாகன போக்குவரத்துகள் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை எதற்காக திறந்து விடாமல் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடையாமல் உள்ளது. மின் விளக்குகள் பொருத்தும் பணிக்கான டெண்டர் விடும் பணி தொடங்க உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அந்த பணிகளை முடித்து விடுவோம் என்றனர்.ஏற்கனவே தொங்கு பாலத்தை சீரமைக்க ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். இனிமேல் மின்விளக்கு பொருத்தும் பணியை யாவது திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தான் நூறாண்டுகள் கடந்த குறுகிய ஜங்ஷன் ரெயில்வே பாலத்திற்கு விடிவு பிறக்கும். இந்தப் பாலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆகவே மேலும் தாமதம் செய்யாமல் தொங்கு பாலத்தை திறந்து வைத்து ரெயில்வே பாலப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×