search icon
என் மலர்tooltip icon
    • பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளராக ஜெயசீலன் தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • 5வது அமைப்பு தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது.இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களான ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவராக அய்யலூர் சுப்பிரமணியனும், மாவட்ட செயலாளராக செ.ஜெயசீலனும், மாவட்ட பொருளாளராக பேரளி சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கவுன்சிலர் ரபியுதினும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆசிரியர் காமராஜ், கே.எஸ்.ரெங்கராஜ், அடைக்கப்பட்டி எல்.ஐ.சி. பாண்டியன், மங்கையர்கரசி சிகமணி ஆகியோரும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்களாக மெடிக்கல் முத்து, வெண்மணி ராஜசேகர், பம்பரம் பழனிமுத்து, அம்மாபாளையம் ஆசிரியர் துரைராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சென்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏற்கனவே ம.தி.மு.க. தலைமை பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயசீலனை நியமித்த நிலையில் இப்பொழுது. அமைப்பு தேர்தலின் மூலம் அவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து
    • வழக்கு பதிந்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் பேரளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். க.எறையூர் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரூ.60 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது
    • அறநிலையத்துறையினர் அதிரடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளியில் 3 ஏக்கர் நிலம் விவசாயி ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், குன்னம் ஆய்வாளர் சுசிலா, பேரளி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், நில அளவையாளர் கண்ணதாசன் மற்றும் பேரளி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக பேரளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • சிறப்பு விசாரணை முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டது
    • மனு அளிக்க வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 42 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி மோசடி
    • போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் மோசடி புகார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மோசடி புகார் மனுக்களை தனித்தனியாக கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்டான்லி சைமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கிரிப்டோ கரன்சியில் ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் பெறலாம் என்று மூளைச்சலவை செய்தார். மேலும் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு தாமே பொறுப்பு என்றும் கூறினார். அவர் கூறியதை நம்பி நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம். ஆனால் அந்த பணத்துக்கு லாபமும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களிடம் பெறப்பட்ட பணமானது அவரது மனைவி மற்றும் மகளிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது. பணப்பரிவர்த்தனை அவரது மனைவியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரது மனைவி, மகளை இந்த வழக்கில் சேர்த்தால் தான் எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். அவர்களிடம் விசாரணை செய்து எங்களுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 200 பேரிடம் மொத்தம் சுமார் ரூ.18 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • லால்குடி அருகே உள்ள தனியார் ஆலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆய்வு மேற்கொண்டார்
    • உரிமங்கள், போக்குவரத்து குறித்து நேரில் ஆய்வு

    லால்குடி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காட்டூரில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எத்தனால் ஆலையில் கொள்ளளவு, விற்பனை மற்றும் போக்குவரத்து, உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். மேலும் செயல்பாடுகள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். உடன் தாசில்தார் சித்ரா, லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் கோத்தாரி நிறுவனத்தினர் இருந்தனர்.

    • மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரிஸ்டோ தொங்கு பாலம் திறப்பு எப்போது?
    • மேலும் காலம் தாழ்த்துவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

    திருச்சி,

    தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எங்கு பார்த்தாலும் நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பஸ் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான போக்குவரத்து இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஆக்டோபஸ் எனும் அரிஸ்டோ மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.இந்தப் பணிகள் 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ஆரம்பத்தில் ரூ.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2 கட்டங்களாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி கையில் எடுக்கப்பட்டது.இதில் சென்னை, மதுரை சாலையை இணைக்கும் மேம்பால பணி ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தப்பட்டு அது தொங்கு பாலமாக மாறியது. சொற்ப ராணுவ நிலத்தை கையகப்படுத்த நீண்ட, நெடிய போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இதன் காரணமாக இந்த பாலம் முழுமை அடையாமல் 8 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.இதற்கிடையே முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை 2018-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை, கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப்பணிகளுக்கான இடத்தினை வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.அதன்படி கடந்த ஆண்டு தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணிகள் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது.

    தற்போது ஒரு வழியாக பாலத்தை கட்டி முடித்து விட்டனர். இருப்பினும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் வாகன போக்குவரத்துகள் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை எதற்காக திறந்து விடாமல் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடையாமல் உள்ளது. மின் விளக்குகள் பொருத்தும் பணிக்கான டெண்டர் விடும் பணி தொடங்க உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அந்த பணிகளை முடித்து விடுவோம் என்றனர்.ஏற்கனவே தொங்கு பாலத்தை சீரமைக்க ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். இனிமேல் மின்விளக்கு பொருத்தும் பணியை யாவது திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தான் நூறாண்டுகள் கடந்த குறுகிய ஜங்ஷன் ரெயில்வே பாலத்திற்கு விடிவு பிறக்கும். இந்தப் பாலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆகவே மேலும் தாமதம் செய்யாமல் தொங்கு பாலத்தை திறந்து வைத்து ரெயில்வே பாலப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்
    • கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    திருச்சி,

    2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி துவங்கி 20-ந்தேதி வரை நடைபெற்றது. திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் 449 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032 மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 94.28 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15,325 மாணவர்களும் 16 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.28 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.03 சதவீதம் அதிகமாகும்.இதில் 52 அரசு பள்ளிகள், 8 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 3 பழங்குடியினர் நலப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 64 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களது மொபைல் போன்களில் தங்கள் தேர்ச்சியையும், பெற்ற மதிப்பெண்களையும் பார்த்து உற்சாகமடைந்தனர்.

    • சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் திடீர் வாபஸ் பெறப்பட்டது
    • பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

    திருச்சி,

    சாலை பணியாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரிகளை கண்டித்தும், சாலை பணிகள் மேற்கொள்வதற்குரிய கருவி, தளவாடங்கள், காலணி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரியும்தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி துறையூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சாலை பணியாளர்களை திட்டிய சாலை ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் கோட்டப்பொறியாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி கோட்ட பொறியாளர் வாயிலாக பரிந்துரை செய்வது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    • புதிய பென்சன் திட்டம் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன

    திருச்சி,

    புதிய பென்சன் திட்டம் ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சகாயநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி தொடக்க உரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரடெரிக் எங்கெல்ஸ், ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன், மாநில தலைவர் லட்சுமணன், எஸ் எஸ் டி ஏ திருச்சி மாவட்ட செயலாளர் நவீன் குமார், பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் செந்தாமலர், துணை பொது செயலாளர் மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.மாநிலத் தலைவர் தமிழ் செல்வி நிறைவுறை ஆற்றினார். முடிவில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் இன்பராஜ் நன்றி கூறினார்.உண்ணாவிரதத்தில் தி.மு.க. அரசு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தில் இறந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணி கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை பணிகள் ஆய்வு செய்தனர்
    • உள் தணிக்கை குழுவினர் செய்தனர்

    அரியலூர்,

    தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த நிதியாண்டில் நடைபெற்ற சாலை மற்றும் பாலப்பணிகளை உள் தணிக்கை குழுவினர் கடந்த 10-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை திட்டங்கள் அலகு கோட்ட பொறியாளர் அருணா தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.

    • உயர்கல்வி குறித்து ஆலோசனை முகாம் நடக்கிறது
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலந்து கொள்ள அழைப்பு

    அரியலூர்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் ஆலோசனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×