search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள்-பெண் பலி
    X

    திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள்-பெண் பலி

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.
    • திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

    திருத்தணி:n

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தை வாசல் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). இவரது உறவினரான திருத்தணி பெரியார் நகரில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மல்லிகா மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மாரிமுத்து மகள் கோமதி (14), விநாயகம் மகள் ஹேமலதா (15) ஆகியோர் திருத்தணிக்கு வந்தனர்.

    இவர்களில் கோமதி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மல்லிகா, கோமதி, ஹேமலதா 3 பேரும் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர். தற்போது அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

    குளித்து கொண்டு இருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் கோமதியும், ஹேமலதாவும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா சிறுமிகள் 2 பேரையும் காப்பாற்றி முயன்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றி வரும் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் மீட்க முயன்றனர். இதில் மல்லிகாவை மட்டும் பிணமாக மீட்டனர். சிறுமிகள் 2 பேரும் நீரில் மூழ்கி மாயமாகி விட்டனர்.

    இதுகுறித்து திருத்தணி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.

    பலியான சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுமிகள் உள்பட 3 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதில் அப்பகுதி மக்கள் குளிக்கும்போது அடிக்கடி அசம்பாவிதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கல்குவாரி குட்டைகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×