search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில்  போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார்
    X

    உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார்

    • ஆத்துப்பாலத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது.
    • போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக ஆத்து பாலம் சிக்னலில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குனியமுத்தூர் மற்றும் சுந்தராபுரம் பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    இதனை கண்ட கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 3 சாலைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சிக்னலில் காத்து நிற்கும் முறையை மாற்றி அமைத்து, ஆத்து பாலத்தில் ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர். பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்களும், பஸ்களும் ஏற்கனவே செல்வது போன்று புட்டு விக்கி சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலத்தில் திரும்பாமல் சிறிது தூரம் முன்னே சென்று யூடர்ன் அடித்து ஆத்துப்பாலத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது.

    அதேபோன்று பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள் பஸ்கள் ஆகியவை புட்டு விக்கி சாலை வழியாக விடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் சிக்னலில் நிற்கும் முறையை மாற்றி அமைத்து ரவுண்டானா முறையில் வரிசையாக சென்று கொண்டே இருக்கலாம். அதேபோன்று உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து நிற்காமல், இதேபோன்று ரவுண்டானா முறையில் செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினர். இதனால் தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் தாமதம் இன்றி நிற்காமல் செல்ல முடிகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:- சென்ற வாரம் வரை ஆத்துப்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்றாலே போக்குவரத்து நெரிசலும் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது. நான்கு சாலைகளிலும் சிக்னலில் காத்து நிற்கும் வாகனங்கள், சிக்னல் போட்ட பிறகு நகரத் தொடங்கும் போது மொத்தமாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து வருவதை காண முடிந்தது.

    தற்போது சிக்னல் முறை இல்லாமல் ரவுண்டானா முறை ஏற்படுத்தியதால், வாகனங்கள் காத்து நிற்காமல் தங்கு தடையின்றி நகரக்கூடிய சூழ்நிலை தற்போது உள்ளது. வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் பிரச்சினை தற்போது கட்டுக்குள் வந்தது போன்ற சூழ்நிலை நெரிசலின்றி உள்ளது. போக்குவரத்து நெரிசலை மிக சாதுரியமாக கையாண்ட போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×