search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதல்: 10-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதல்: 10-ம் வகுப்பு மாணவன் பலி

    • காஞ்சிபுரம் நோக்கி மீன் ஏற்றி சென்ற சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஐஸ்கட்டிகளை இறக்கி கொண்டு இருந்த வேன் மீது வேகமாக மோதியது.
    • பலியான அஜய் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ரகு. கரும்பு ஜூஸ் கடை வைத்து உள்ளார். இவரது மகன் அஜய்குமார் (வயது15). இவர் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அஜய்குமார் பழஞ்சூரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சரக்கு வேனில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளை கடைக்கு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் வேனின் அருகே நின்று கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மதுரவாயலில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி மீன் ஏற்றி சென்ற சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஐஸ்கட்டிகளை இறக்கி கொண்டு இருந்த வேன் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஐஸ்கட்டி வாங்க வந்த மாணவன் அஜய்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அருகே நின்று கொண்டு இருந்த ஐஸ்கட்டி ஏற்றி வந்த வேனின் டிரைவர் சுரேஷ் மற்றும் மீன்வேன் வேன் டிரைவர் சத்யா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான அஜய் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    மாணவன் அஜய்குமார் அடுத்த வாரம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் ஐஸ்கட்டி வாங்க வந்தபோது அவர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

    Next Story
    ×