search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு கால்நடை மருத்துவமுகாமை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆண்டிபட்டி அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

    • கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
    • தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்தக் கோவில் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண்மை ஆகிய இரு தொழில்கள் கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் கால்நடை வளர்ப்பு செல்வத்தின் குறியீடாக திகழ்கிறது. இதனை பேணி காப்பதில் கால்நடை வளர்ப்பவர்களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கால்நடைகளை பாதுகாக்க பல்வேறு தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளின் முக்கியத்துவம் கருதி நடத்தப்படும் இந்த கால்நடை சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைவரும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் பொழுது 1962 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கால்நடைத்துறை டாக்டர்கள் தங்களது இல்லத்திற்கே வந்து தேவையான முதலுதவிகளை செய்து, கால்நடை மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அல்லது கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. தங்கள் மாடுகள் மூலம் கறக்கப்படும் பால்களை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் கால்நடைகளுக்கான ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஸ்கேன் மூலம் பரிசோதனை, மலடு நீக்குதல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர்கள் வருகை தந்து தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை இங்கே தீர்த்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளங்கன்றுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை நீக்குவதற்கான தாது உப்புகள் வழங்கப்படுகிறது. தங்கள் வளர்ப்புப் பிராணிகளை நோய் தாக்குதலின்றி எவ்வாறு வளர்ப்பது குறித்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×