search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயநாடு நிலச்சரிவு: மருத்துவப்பணிகளில் ஈடுபட்ட நர்சை பாராட்டிய மா.சுப்பிரமணியம்
    X

    வயநாடு நிலச்சரிவு: மருத்துவப்பணிகளில் ஈடுபட்ட நர்சை பாராட்டிய மா.சுப்பிரமணியம்

    • உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
    • மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.

    இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-

    வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.

    மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

    பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.

    மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.

    முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×