search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கத்தின் விலை உயர்வு ஏன்?
    X

    தங்கத்தின் விலை உயர்வு ஏன்?

    • இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர மக்கள் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர்.
    • இனி தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கானல் நீராக மாறி விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    தங்கத்தில் போட்ட காசு என்றுமே வீணாகாது என்று சொல்வார்கள். அந்த அளவு உலக சந்தையில் தங்கத்துக்கு என்றுமே தனி மவுசு தான். அதுவும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது உண்டு.

    ஆண்களில் கூட விதவிதமான தங்க நகைகள் அணிபவர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் மீதான மோகம் எல்லோரிடமும் உள்ளது. பெண்களை திருமணம் செய்து கொடுக்க வரதட்சணையில் தங்கம் மிக முக்கிய இடத்தை பெற்று திகழ்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் வேட்டு வைக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவில் தங்கம் விலை இன்று பவுன் ரூ 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    நகை கடைக்கு சென்று ஒரு பவுன் செயின், மோதிரம் போன்ற ஆபரணங்கள் வாங்கினால் செய்கூலி, சேதாரம். வரிகள் போன்றவற்றால் ரூ.50 ஆயிரத்தை தொட்டு விடும். இதனால் இனி தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கானல் நீராக மாறி விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர மக்கள் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர். தங்கம் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் என்பதோடு அவசர பண உதவிக்கு யாரிடமும் கையேந்தாமல் நகைகளை அடகு வைக்கவும் உதவுகிறது.

    அமெரிக்கா வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது விழுந்துள்ளது.

    இதனால் பங்கு சந்தையில் இருந்து அவர்கள் மாறி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானது என நினைத்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாலும். சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இல்லத்தரசிகள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் கடந்த மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம். வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏழை மற்றும் பெண் குழந்தைகளை வைத்து இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது.

    Next Story
    ×