search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவு நடன விடுதிகளில் போதையில் மிதக்கும் இளம்பெண்கள்
    X

    இரவு நடன விடுதிகளில் போதையில் மிதக்கும் இளம்பெண்கள்

    • கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.
    • சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தொழில் விஷயமாக வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இதுபோன்று வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பல நாட்கள் வரையில் தங்கி இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இரவு நேர மதுபான விடுதிகளை நாடிச் செல்வார்கள்.

    சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவே இரவு நேர நடன விடுதிகள் பல செயல்படுகின்றன. இந்த விடுதியில் இளம் வாலிபர்களுக்கு இணையாக இளம் பெண்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு போதையில் மிதப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.

    வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விமானம் மூலமாக கடத்தி வரப்பட்டு சத்தமில்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான கொக்கைன் பிடிபட்டது.

    தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 'பப்' என்று அழைக்கப்படும் இரவு நேர விடுதிகளில் 'கொக்கைன்' பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக இளம் பெண்களிடம் கொக்கைன் பயன் படுத்தும் பழக்கம் அவர்களது ஆண் நண்பர்களிடமிருந்தே தொற்றிக் கொண்டுள்ளது. இது போன்று போதை பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்களால் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிவது இல்லை.

    சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் சென்னை மாநகர் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களையும், இளம் வயதுடையவர்களையும் சென்றடைந்து விடுகிறது. உணவு டெலிவரி செய்பவர்களில் சிலர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி விற்பனை செய்தும் வருகிறார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலர் விற்பனை செய்கிறார்கள். சென்னை மாநகரில் குட்கா போன்ற பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கடைகளில் அது தாராளமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி சென்னையில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது.

    Next Story
    ×