search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஏழைகளுக்கு கொடுக்க நினைப்பதை தடுக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    ஏழைகளுக்கு கொடுக்க நினைப்பதை தடுக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    தைப்பொங்கல் பரிசு, தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என ஏழைகளுக்கு கொடுக்க நினைப்பதை தடுக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #Edappadipalaniswami #MKStalin
    திருச்சி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறியில் இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெற இருப்பது பாராளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் மத்தியில் நல்ல ஆட்சி, திறமையான பிரதமர் நாட்டை ஆள வேண்டும். நாடு நலம்பெற நாட்டின் பாதுகாப்பு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு நன்றாக இருந்தால் தான் முசிறியிலும் பாதுகாப்பு இருக்கும். எனவே நம் நாட்டிற்கு தகுதியான, திறமையான பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும்.

    நான் மற்றும் நாமெல்லாம் விவசாயிகள். நான் இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்டம், இன்னல்கள் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் விவசாயத்தை பற்றி கேலியும், கிண்டலும் பேசி வருகிறார். கோதாவரி- காவேரி நதி இணைப்பு திட்டம் வரவுள்ளது. பாராளுமன்றத்தில் முதல் குரல் இந்த கோரிக்கை எழப்போகிறது.

    கோதாவரியை தெலுங்கானா வழியாக கொண்டு வந்தால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும். இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும் இதனை குறிப்பிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியின் முதல் கோரிக்கை தண்ணீருக்காக தான். குடிமராமத்து திட்டத்தில் ஆறு, மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி வருகிறோம். இன்று வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். நீர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வறிக்கையை சமர்பித்து வருகிறது. அதன்படி தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணை வேண்டுமோ அதை கட்டுவோம். தற்போது 3 தடுப்பணை கட்டப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் இதே போல் நீர் மேலாண்மைக்கு செய்தார்களா? எந்த திட்டமும் செய்யவில்லை. தமிழகத்தில் எத்தனை தடுப்பணை முடியுமோ அத்தனையும் அம்மாவின் அரசு நிச்சயம் கட்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பது எங்களின் நோக்கம். வேளாண் பணி சிறக்க வேண்டும். வேளாண் பொருட்கள் காய்கறி, பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.

    2 ஆயிரம் கோடியில் சென்னையில் உணவு பூங்கா அமைக்கிறோம். விவசாய பொருட்களுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் ஒரு மாதம் வரை பொருட்களை வைத்து, விலையேறும் போது விற்பனை செய்யலாம். 900 ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்க உள்ளோம். அதில் கலப்பின, நாட்டு பசு போன்றவை நோய் தடுப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

    அதிகம் பால் கொடுக்கும் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்குவோம். இந்த உணவு பூங்கா தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இது விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் தேவையை நிறைவேற்றுவோம்.

    கோதாவரி-காவேரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மோட்டார் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் எடுத்து செல்லப்படும். இதற்காக திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. நான் செய்வதை தான் சொல்வேன், ஸ்டாலின் போல சொல்லி விட்டு செல்லமாட்டேன்.



    தை பொங்கல் பரிசு ஆயிரம் கொடுத்தோம். அதை ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்க நினைக்கிறார். அவர் மக்களுக்கு நன்மை அளிக்க கட்சி நடத்தவில்லை.

    தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவித்தேன். அதை ஸ்டாலின் தடை செய்ய முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்றம் தடை வழங்க மறுத்துள்ளது. வழக்கினையும் தள்ளுபடி செய்தது.

    தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் கட்சி பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஸ்டாலின் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஏழைகளுக்கு கொடுப்பதை இந்தியாவிலே தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். ஏழைகள் வாழ்வு பெற மத்திய அரசு ஓய்வுதியம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கவுள்ளது.

    முசிறி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதனைகளை கூறியும், செய்யவுள்ளதையும் கூறி ஓட்டு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் ஆளும் கட்சியினரையும், பிரதமரை மற்றும் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்.

    தொட்டியம் வட்டத்தில் காட்டு நாயக்க இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்யும். சிவபதியின் வெற்றி இந்த மண்ணிற்கான பெருமை. தமிழகம் முழுவதும் 90 சதவிதம் இடத்திற்கு சென்றுள்ளேன். இன்னும் 10 சதவிதம் உள்ளது. அங்கும் சென்று விவசாயிகளை, பொது மக்களை சந்தித்து சாதனைகளை கூறி ஓட்டு கேட்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Edappadipalaniswami #MKStalin
    Next Story
    ×