search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதுரை வருகை
    X

    தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதுரை வருகை

    பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். #LoksabhaElections2019 #PMModi
    மதுரை:

    நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி கேரளா, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இரவு பிரசாரத்தை முடித்து விட்டு சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரதமர் மோடி பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் (13-ந்தேதி) காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 5 தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்திற்கு மோடி செல்கிறார். அங்கு அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பரமக்குடி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பிரதமர் கலந்து கொள்ளும் ஆண்டிப்பட்டி, ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தையொட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


    இந்த கூட்டங்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு கருதி பிரதமரின் பிரசார நேரம் மாற்றப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிரசாரத்திற்காக மதுரை வரும் பிரதமர் மோடி முதன் முறையாக பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி அந்த பகுதி முழுவதுமே மத்திய-மாநில போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றப்படுகிறது. #LoksabhaElections2019 #PMModi
    Next Story
    ×