search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராசிபுரத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த காட்சி.
    X
    ராசிபுரத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த காட்சி.

    தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்புகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மா இன்றைக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அம்மா இருசக்கர வாகனம் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அம்மா இருசக்கர வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைகிறார்கள். அதுபோல் தாலிக்கு தங்கம் 1 பவுன், திருமண உதவி தொகை ரூ.50 ஆயிரம் கொடுத்து வருகிறோம். எதை எல்லாம் அம்மா சொன்னார்களோ, அதை எல்லாம் நாங்கள் கொடுத்து வருகிறோம்.

    ஆனால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்து இருக்கிறார்கள்?. நிலத்தை அவர்கள் பிடுங்காமல் இருந்தால் மிச்சம்.

    தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி இன்றைக்கு சூழ்ச்சி முறையிலே வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கின்ற வாக்குறுதி தான் நிறைவேற்றப்படும். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் வெளியிடுகிற தேர்தல் அறிக்கை உண்மையான அறிக்கை.

    நம்முடைய பகுதி வறட்சியான பகுதி. குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படுகின்றன. இந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் குளங்களில், ஏரிகளில் பாதுகாக்கப்படுகிறது.

    அதைப்போல ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளுக்கு நாங்கள் செய்துள்ள நன்மைகள்.

    மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் தி.மு.கவினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் பதவியில் இருந்தார்கள். அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த பயன் ஒன்றுமே கிடையாது. குடும்பம் நலன் பெற்றது. ஆகவே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் குடும்பம் தான் வளரும். நலன் பெறும்.

    ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து, நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதது தி.மு.க., மீண்டும் இவர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தாத கட்சி தான் தி.மு.க.

    ஆனால், அ.தி.மு.க. அப்படி இல்லை. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலை நம்முடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்தார்கள். இதனால் பாராளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.

    தி.மு.க. ஒரு நாளாவது காவிரி நதி நீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்களா?.

    இன்றைக்கு 20 மாவட்ட மக்களுடைய குடிநீர் ஆதாரம் காவிரி நதி நீரை நம்பி தான் இருக்கின்றது. இந்த நீருக்காக என்ன குரல் கொடுத்தார்கள்?.



    தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. இதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என எல்லா கட்சியும் சொன்னது. இதை நடைமுறைபடுத்தவில்லை.

    மத்திய அரசிதழில் வெளியிடாத காரணத்தினால் 10 ஆண்டுகாலம் நமக்கு கிடைக்கின்ற நீர் கிடைக்காமல் போனது. விவசாயிகள் பல அல்லல்களுக்கு உள்ளானோம். குடிநீருக்கு கூட காவிரி ஆற்றில் தண்ணீர் கிடையாது. இந்த அவல நிலைக்கு காரணம் தி.மு.க. செய்த மாபெரும் துரோகம்.

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது அம்மாவுடைய அரசு.

    விவசாயிக்கு நீர் வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் முக்கியம். இவை இரண்டும் என்னுடைய முதல் திட்டம். ஆகவே இந்த தேர்தல் மூலமாக கோதாவரி- காவிரி நதி நீரை இணைத்தே தீருவோம். இந்த திட்டத்தை நிறைவேற்றுகிற போது, நம்முடைய பகுதி செழிப்படையும். இங்கு இருக்கின்ற குளங்கள், ஏரிகளுக்கு நீரேற்று மூலமாக நீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் குடிநீர் தேவை முதல் விவசாயத்திற்கு தேவையான நீர் வரை கிடைக்கும்.

    இந்த திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால், நாடு செழிக்கும். யார் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு.

    ரூ.55½ கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து இன்றைக்கு முடியும் தருவாயில் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் எல்லாம் சீரமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் விரைவில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

    அதைபோல் ராசிபுரம் பகுதி வறட்சியான பகுதியாக இருக்கின்றது. பருவமழைக்காலங்களில் சரியாக மழை பெய்யவில்லை என்றால், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.

    ஆகவே ராசிபுரம் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக அம்மாவுடைய அரசு தனி கூட்டு குடிநீர் திட்டம் இந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வகுத்து இருக்கின்றோம். ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக அரசு வழங்கும். 1200 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியில் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும். ராசிபுரத்தில் புறவழிச்சாலை முதல் கட்ட பணி முடிவடைந்து விட்டது. 2-ம் கட்டபணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    ராசிபுரத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
    Next Story
    ×