search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    சென்னை காய்கறி கடையில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்கினாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி
    X

    சென்னை காய்கறி கடையில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்கினாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி

    • வைரல் புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது.
    • இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல என தெரியவந்துள்ளது.

    தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார். கடைகளில் கீரை மற்றும் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. நிர்மலா சீதாராமனும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் காய்கறி வாங்கியபோது வெங்காயம் வாங்கியது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெங்காயம் குறித்து பலரும் ட்ரோல் செய்தனர். இந்த புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது. அதில், 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடவே மாட்டார் என்று பாராளுமன்றத்தில் கேள்விப்பட்டோம். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் பக்கத்து வீட்டுக்கு வெங்காயத்தை வாங்குகிறாரா? கிண்டலாக கூறப்பட்டிருந்தது.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. எனவே, இதுபற்றி இந்தியா டுடேயின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. இதில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்குவது போன்ற புகைப்படம் போலியானது என்பது தெரியவந்தது. வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வெங்காயத்தை இணைத்து, சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    அமைச்சர் வெங்காயம் சாப்பிடுகிறரா? இல்லையா? என்பது உண்மைச் சரிபார்ப்புக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல.

    இதுதவிர நிதியமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில், அவர் காய்கறி வாங்கும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களையும் வீடியோவையும் காண முடிகிறது. இவற்றில் எங்கும் அவர் வெங்காயம் வாங்குவதைக் காண முடியவில்லை. வீடியோவில் உள்ள ஒரு பிரேம், வெங்காயங்களைக் கொண்ட வைரல் புகைப்படத்துடன் மிகவும் ஒத்ததாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு வெங்காயம் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×