search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்முவில் கிராம பாதுகாவலர்கள் 2 பேர் கடத்தி கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்
    X

    ஜம்முவில் கிராம பாதுகாவலர்கள் 2 பேர் கடத்தி கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

    • வெளிமாநில மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்.
    • தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதும், கொல்வதும் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக இல்லாத வெளிமாநில மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை தாக்கி வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஓலிகுந்த்வாரா கிராமத்தை சேர்ந்த கிராம பாதுகாவலர்களான நசீர்அகமது, குல்தீப்குமார் ஆகியோர் அத்வாரியில் உள்ள முன்ஸ்லா தார் காட்டுப் பகுதியில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றனர்.

    அப்போது அவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்று, சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்ட கிராம காவலர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது.

    அவர்களது உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. உடல்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு ஜெய்-இ-முகமது அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையே கிராம பாதுகாவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் மனோஜ்சின்ஹா, முதல்-மந்திரி உமர்அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜனதாவினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கவர்னர் மனோஜ்சின்ஹா வெளியிட்டுள்ள பதிவில், கிராம பாதுகாவர்கள் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த துணிச்சலான மகன்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து பயங்கர வாதத்தையும் அழித்து இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பழிவாங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்தநிலையில் வடக்கு காஷ்மீரில் சோபுரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.ரக துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×