search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? புதிய தகவல்கள்
    X

    முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? புதிய தகவல்கள்

    பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.#KarnatakaElection
    பெங்களூரு:

    நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் கால் பதிக்க கர்நாடகம்தான் நுழைவு வாயில் என்று கருதிய பா.ஜனதாவினர் எப்படியாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இருப்பினும் பா.ஜனதாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் கர்நாடகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. அது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஹேமமாலினி, மத்திய மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

    இதுகுறித்து பா.ஜனதா மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஹேமமாலினி மற்றும் மனோஜ் சின்ஹா ஆகியோரை அழைக்கவில்லை. அவர்களுடைய வருகை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. அதனால் அவர்களை நாங்கள் பிரசாரத்திற்காக அழைக்கவில்லை” என்று கூறினார்.

    இதேபோல் காங்கிரசிலும் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும், நடிகையுமான ரம்யா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் பலமுறை அவரை பிரசாரத்தில் ஈடுபடக்கோரி அழைத்தோம். இருப்பினும் அவர் வரவில்லை. அவர் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

    இதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோரும் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கட்சி ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால், அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. #KarnatakaElection
    Next Story
    ×