search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் பா.ஜனதாவின் பலம் 272 ஆக குறைந்தது
    X

    பாராளுமன்றத்தில் பா.ஜனதாவின் பலம் 272 ஆக குறைந்தது

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமுலு தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 272 ஆக குறைந்துள்ளது. #BJP #Parliament
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அந்த கட்சியின் பலம் 272 ஆக குறைந்து உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார். இதனால் தான் பா.ஜனதாவின் பலம் 272 (சபாநாயகர் நீங்கலாக) ஆக தற்போது குறைந்து உள்ளது.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடியிடமும், பீட் (மத்திய பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ்சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதிகளில் காங்கிரசிடமும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    கட்சி விதிமுறைகளை மீறியதால் கீர்த்தி ஆசாத்தை பா.ஜனதா சஸ்பெண்டு செய்துள்ளது. மேலும் மற்றொரு எம்.பி.யான சத்ருகன் சின்கா நேரடியாகவே பா.ஜனதாவை விமர்சித்து வருகிறார். இந்த இருவருமே 272 பேர் கொண்ட பட்டியலில் அடங்குவார்கள்.


    பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு தற்போது மெஜாரிட்டிக்கான 272 உறுப்பினர்களே இருக்கிறார்கள். ஆனால் கூட்டணி கட்சிகள் ஆதரவால் பா.ஜனதா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. தெலுங்கு தேசம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. சிவசேனா கூட்டணியில் இருந்தாலும் கடுமையாக பா.ஜனதாவை விமர்சித்து வருகிறது.
    இந்த நிலையில் 4 எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதியிலும் உத்தர பிரதேசம், நாகலாந்தில் தலா ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மராட்டியத்தில் பா.ஜனதா உறுப்பினர் நானாபடோல் ராஜினாமா செய்ததால் பாந்திரா தொகுதியிலும், பா.ஜனதா உறுப்பினர் வங்கா மரணம் அடைந்ததால் பால்கர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

    இதே போல் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி. மரணத்தால் கைரானா தொகுதியிலும், நாகலாந்து முதல்- மந்திரி தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததாலும் அங்கு தேர்தல் நடக்கிறது.

    இந்த இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜனதா கடுமையாக போராடும்.

    கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

    மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு பா.ஜனதா கட்சி வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. #BJP #Parliament
    Next Story
    ×