search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - குமாரசாமி பேட்டி
    X

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - குமாரசாமி பேட்டி

    நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கூட்டணி ஆட்சியின் தலைமை பொறுப்பை நான் ஏற்கிறேன். கூட்டணி ஆட்சியில் செயல்பட ஒரு வரைமுறை இருக்கிறது என்பதை நான் அறிவேன். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, கூட்டணி கட்சியுடன் ஆலோசித்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனால் எங்கள் 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும் செயல்படுத்த வேண்டும்.

    கர்நாடகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திய பிறகு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த விஷயத்தில் நான் எனது நிலையை மாற்றிக்கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை. கர்நாடக நிதி நிலையில் சில பிரச்சினைகள் உள்ளன. மாநிலத்தின் பொருளாதார நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம்.



    பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மாட்டோம் என்று நான் கூறியதாக தகவல் வெளியானது. இது தவறானது. நாங்கள் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம். அதனால் விவசாயிகள் அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்கக்கூடாது. விவசாயிகளுக்கு உதவ அரசு தயாராக உள்ளது.

    விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். விவசாயியின் மகனான நான் அவர்களுக்கு சேவையாற்றுவேன். விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதே இந்த கூட்டணி ஆட்சியின் கடமை. என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று யாரும் கருதக்கூடாது. 6½ கோடி கன்னட மக்களுக்கு சொந்தமானவன். நான் பொதுமக்களுக்கு சேவையாற்றுபவன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். 
    Next Story
    ×