search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வித்துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்
    X

    கல்வித்துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்

    கல்வித் துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியை செலவிடுவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    சாந்திநிகேதன்:

    நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 49-வது பட்டளிப்பு விழா மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் அருகே உள்ள சாந்திநிகேதனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சாந்திநிகேதனுக்கு கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அவரை வரவேற்க ஹெலிகாப்டர் தளம் அருகே மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதி மட்டுமே காத்திருந்தார். மரபுப்படி பிரதமரை கவர்னரும், மாநில முதல்-மந்திரியும் வரவேற்கவேண்டும்.

    ஆனால் திறந்த வெளிபகுதியில் வெயில் கடுமையாக இருந்ததால் மம்தா பானர்ஜி சற்று தள்ளியே நின்றிருந்தார். பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் அவரை வரவேற்க குண்டும் குழியுமான பாதை வழியாக மம்தா பானர்ஜி வேக வேகமாக நடந்து சென்றார்.

    அதைப் பார்த்ததும் மோடி, பாதை சீரற்று இருக்கிறது கவனமாக வாருங்கள் ஒன்றும் அவசரமில்லை என்று கூறியவாறே மம்தா பானர்ஜியை நோக்கி நடந்தார். அதற்குள் விரைந்து வந்த மம்தா பானர்ஜி, மோடிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் மோடி, கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மம்தா பானர்ஜி மூவரும் விழா மேடைக்கு ஒன்றாக சென்றனர்.

    விழாவில் பேசிய மோடி, முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் பேசியதாவது:-


    இங்கு நான் வந்தபோது சில மாணவர்கள் என்னிடம் இங்கே சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று முறையிட்டனர். அதற்காக மாணவர்களிடம் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வித இடர்ப்பாடுகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

    இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தாகூரின் லட்சியங்களை முன்னெடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் அவருடைய கல்விச் சொத்து இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதையும் கடந்து நிற்கிறது. அதனால்தான் ரவீந்திரநாத் தாகூர் இன்றும் உலகளாவிய குடிமகனாக போற்றப்படுகிறார்.

    மாணவர்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மட்டுமே போதாது. காலத்துக்கேற்ப பொருத்தமாக எதைக் கற்றுக் கொண்டோம் என்பது அதை விட முக்கியம். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கோவில் போன்றது. இங்கு குருவாக(வேந்தர்) நான் வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.

    இங்கே விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2021-ம் ஆண்டில் 100 முதல் 200 கிராமங்களை தத்து எடுக்கப் போவதாக தெரிவித்தார்கள். இந்த கிராமங்கள் சுய சார்பு கொண்டவையாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், மின்னணு கல்வி முறை கொண்டதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும். கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடியை செலவிடுதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    Next Story
    ×