search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    X

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    கேரளாவில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும்.

    இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை தொடர்ந்து வந்த நாட்களில் கனமழையாக மாறியது.

    ஜூன் முதல் வாரம் தொடங்கியுள்ள நிலையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று 9.4 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழை கோழிக்கோட்டில் 58.6 மில்லி மீட்டராகவும், கொல்லத்தில் 12.3 மில்லி மீட்டராகவும் பெய்துள்ளது.

    அடுத்து வரும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும். இன்றும் நாளையும் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும். 7,8,9-ந்தேதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு மாவட்ட மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.


    குமரி மாவட்ட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

    தற்போது வங்க கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்ப சலனத்தாலும் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்திலும், தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Tamilnews
    Next Story
    ×