search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் சாப்பிட்டு மியான்மரில் தூங்கும் மக்கள்- எல்லை கிராம மக்களின் இரட்டை வாழ்க்கை
    X

    இந்தியாவில் சாப்பிட்டு மியான்மரில் தூங்கும் மக்கள்- எல்லை கிராம மக்களின் இரட்டை வாழ்க்கை

    நாகலாந்தின் எல்லை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவிலும், இரவில் மியான்மரிலும் என 2 நாடுகளில் வாழ்கின்றனர்.
    யங்கூன்:

    நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி. இங்கு வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவில் உணவு சாப்பிடுகிறார்கள். இரவில் மியான்மரில் தூங்குகிறார்கள். இவர்கள் 2 நாடுகளிலும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

    இங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மியான்மர் நாட்டின் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வெளிநாட்டு மாணவர்கள் பலர் படிக்கின்றனர்.

    கடந்த 1970-ம் ஆண்டில் இந்தியா-மியான்மர் எல்லை பிரிக்கப்பட்டது. அப்போது எல்லைப்பகுதியில் 30 கிராமங்களுக்கு தலைவராக விளங்கும் லாங்கா கிராமத்தின் தலைவரின் (ஆங்) வீட்டின் குறுக்கே இந்தியா-மியான்மர் எல்லை வந்தது. இதனால், அவரது வீட்டின் ஒரு பகுதி இந்தியாவிலும், மற்றொரு பகுதி மியான்மரிலும் உள்ளது. எனவே, அவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பகலில் இந்தியாவில் சாப்பிட்டு, இரவில் மியான்மரில் தூங்குகின்றனர்.

    இதேபோல் எலையோரத்தில் இருந்த 30 கிராமங்களில் 26 கிராமங்கள் மியான்மர் வசமும், மீதி கிராமங்கள் இந்தியா கட்டுப்பாட்டில் வந்தன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் ஒரே ஒரு தலைவர் ஆங் தான்.

    இக்கிராமங்களில் ‘சோன்யாக்’ என்ற மலைவாழ் இனமக்கள் வாழ்கின்றனர். கிராம மக்கள் விறகுகளை பொறுக்க இருநாட்டு எல்லை பகுதிக்கும் வந்து செல்கின்றனர். ஏலக்காய் மற்றும் கஞ்சா, அபின் போன்றவைகளை பெற்று வருகின்றனர்.

    லாங்வா பகுதியில் கஞ்சா மற்றும் அபின் பயிரிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மியான்மர் நாட்டுக்குள் எல்லை தாண்டி செல்கின்றனர். அதேபோன்று மியான்மர் நாட்டின் எல்லை கிராம மக்கள் இந்திய பகுதிக்கு வந்து கடைகளில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    நாகலாந்தில் வாழும் நாகர்கள் மியான்மரில் 16 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் எல்லையோர நாகலாந்து மக்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தலைநகர் யங்கூன் வரை எந்தவித ஆவணமும் இன்றி பயணம் செய்கின்றனர். எந்தவித பதிவு நம்பர் இன்றி மியான்மருக்கு 2 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×