search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய சட்டத்தின் கீழ் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு
    X

    புதிய சட்டத்தின் கீழ் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு

    வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்வதற்காக அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #VijayMallya
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையா மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.

    நிதி மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி, வழக்கு விசாரணை முடிந்த பின்னரே முறைகேட்டில் ஈடுபட்டவரின் சொத்துகளை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்தின்’ படி தப்பியோடிய குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    எனவே இந்த சட்டத்தின்படி மல்லையாவை ‘தப்பியோடிய குற்றவாளி’ என அறிவித்து, மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை கோர்ட்டில் புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.

    அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு கோர்ட்டு அனுமதி அளித்தால், புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நபர் மல்லையாவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya
    Next Story
    ×