search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேவேகவுடா
    X

    காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேவேகவுடா

    சித்தராமையாவின் செயல்பாட்டால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேவே கவுடா ஜனதா தளம்(எஸ்) கட்சியை குறைவாக மதிப்பிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #siddaramaiah #devagowda
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரும் பதவி ஏற்றுள்ளனர். வருகிற 5-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சித்தராமையா தனது ஆதரவாளர்களிடம் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சித்தராமையாவின் இந்த கருத்துக்கு குமாரசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே சித்தராமையாவின் செயல்பாட்டால் தேவேகவுடாவும் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து தேவேகவுடா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத 6 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் மாநிலங்களில் கூட்டாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தேவை இல்லை. உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தலா 40 இடங்களை பகிர்ந்து கொள்வது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. ஆனால் பிற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    சில சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தொகுதி பங்கீடு குறித்து இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், குமாரசாமியும் பேசி இதை முடிவு செய்வார்கள். நானும் சில கட்சிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளேன். கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.

    இதற்கு பதிலாக உத்தரபிரதேசத்தில் எங்கள் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்குமாறு பகுஜன் சமாஜ் கட்சியிடம் வலியுறுத்துவேன். கேரளாவில் ஒரு இடத்தை எல்.டி.எப். கூட்டணி எங்களுக்கு ஒதுக்கும். ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரஸ் குறைவாக மதிப்பிடக்கூடாது. மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் உரிய மதிப்பளிக்க வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #siddaramaiah #devagowda
    Next Story
    ×